பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி
கணக்கெடுக்கும் பணி
தேனி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் 6 வயது முதல் 18 வயது நிரம்பிய பள்ளி செல்லா, இடைநிறுத்தம் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை கண்டறிவதற்காக சிறப்பு கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி ஒருங்கிணைந்த பள்ளி கல்வியின்கீழ் சிறப்பு மையங்கள் மூலம் நடப்பு ஆண்டுக்கான பள்ளி செல்லா குழந்தைகளை கணக்கெடுக்கும் பணி நடக்கிறது. போடி பகுதியில் பள்ளி செல்லா குழந்தைகளை கணக்கெடுக்கும் பணி கடந்த 2-ந்தேதி தொடங்கியது. இதனைத் தொடர்ந்து ெரயில் நிலையம், பஸ்நிலையம், ஓட்டல்கள், குடிசை பகுதிகள், கடைகள் மற்றும் தொழிற்சாலைகளில் ஆய்வு செய்ய அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து போடி பகுதியில் ஓட்டல்கள், தொழிற்சாலைகள், கடைகளில் குழந்தை தொழிலாளர்களை கண்டறியும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த கணக்கெடுப்பின்போது கொரோனா தொற்று காரணமாக பெற்றோரில் ஒருவரையோ அல்லது இருவரையும் இழந்த மாணவர்கள் விவரங்களை சேகரிக்க வேண்டும் என்று அலுவலர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கணக்கெடுப்பு சார்ந்த அனைத்து செயல்பாடுகளையும் ஆவணப்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டு இருப்பதாக தெரிகிறது.
பள்ளியில் சேர்க்க நடவடிக்கை
இவையில்லாமல் கணக்கெடுப்பில் கண்டறியப்படும் பள்ளி செல்லா இடை நின்ற குழந்தைகள், மாற்றுத்திறனாளி குழந்தைகள் உடனடியாக பள்ளியில் சேர்த்து எமிஸ் தளத்தில் பதிவிட வேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
கணக்கெடுப்பின்போது பள்ளிக்கு செல்லாத பெண் குழந்தைகள், வெளிமாநிலத்தை சேர்ந்த குழந்தைகள் கண்டறியப்பட்டால் உடனடியாக அந்த குழந்தைகளை கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.