பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது
பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது
தளி
உடுமலை அருகே அரசு தொடக்கப்பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இந்த சம்பவம் இரவு நேரம் நடந்ததால் அசம்பா விதம் தவிர்க்கப்பட்டது.
அரசு பள்ளி மேற்கூரை இடிந்தது
உடுமலையை அடுத்த கல்லாபுரம் ஊராட்சி கொம்பேகவுண்டன்புதூரில் தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 56 குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பள்ளி வளாகத்தில் உள்ள ஒரு கட்டிடத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இரவு நேரத்தில் சம்பவம் நடந்ததால் பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது. இதுவே பகல் நேரத்தில் நடந்திருந்தால் குழந்தைகள் பாதிக்கப்பட்டு இருப்பார்கள். இந்த சம்பவத்தால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் மாணவர்கள் அச்சமடைந்து உள்ளதால் பள்ளிக்கூடம் செல்வதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர். இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
சமீபத்தில் பழுது பார்க்கப்பட்டது
இந்த பள்ளியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 2021-2022 ம் ஆண்டிற்கான பள்ளி சீரமைப்பு திட்டத்தின் கீழ் ரூ. 1 லட்சத்து 85 ஆயிரம் செலவில் பழுதுபார்ப்பு, வர்ணம் பூசுதல் உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
பணிகள் தரமாக மேற்கொள்ளப்படாததே இந்த விபத்திற்கு முக்கிய காரணமாகும். எனவே இது குறித்து மாவட்ட நிர்வாகம் விசாரணை மேற்கொண்டு தரமான முறையில் புனரமைப்பு பணிகளை செய்யாத நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் சேதம் அடைந்த பள்ளிக்கட்டிடத்தின் மேற்கூரையை முழுவதுமாக சீரமைத்து தருவதற்கும் முன்வர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். புனரமைப்பு பணிகள் நடைபெறும் போது பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளோ அல்லது பள்ளி நிர்வாகமோ முறையாக கண்காணித்து இருந்தால் பணிகளும் தரமான முறையில் நடைபெற்று இருக்கும். பொது மக்களின் வரிப்பணம் வீணாகி இருக்காது.
அதிகாரிகளின் பொறுப்பற்ற தனத்தால் அரசுக்கு பொதுமக்கள் மத்தியில் அவப்பெயர் ஏற்பட்டு உள்ளது. எனவே பள்ளிக் கட்டிடத்தின் மேற்கூரை இடிந்த விவகாரத்தில் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்பது பொதுமக்களின் வேண்டுகோளாக உள்ளது.