தூக்குப்போட்டு பள்ளி மாணவி தற்கொலை
சிதம்பரம் அருகே தூக்குப்போட்டு பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
அண்ணாமலை நகர்,
சிதம்பரம் அருகே கவரப்பட்டு ரோட்டு தெருவை சேர்ந்தவர் சவுந்தரபாண்டியன் மகள் சந்தியா (வயது 16). இவர் அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இந்தநிலையில் கடந்த 6-ந் தேதி சந்தியாவின் தாய் ஆனந்தி, மகளிர் உரிமைத்தொகைக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சந்தியாவிடம் கொடுத்து அதனை அங்குள்ள மகளிர் குழு கட்டிடத்தில் உள்ள பொறுப்பாளரிடம் கொடுக்க சொல்லி விட்டு வயல் வேலைக்கு சென்றார். ஆனால் விண்ணப்பத்தை சந்தியா கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் வீடு திரும்பிய ஆனந்தி, விண்ணப்பத்தை கொடுக்காதது குறித்து சந்தியாவிடம் கேட்டு திட்டியுள்ளார். இதில் மனமுடைந்த சந்தியா வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார்.
இதைபார்த்த உறவினர்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரத்தில் உள்ள கடலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சந்தியா இறந்தார். இது குறித்து புகாரின் பேரில் அண்ணாமலை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.