தாமிரபரணி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவி பலி
நெல்லை அருகே தாமிரபரணி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவி பரிதாபமாக இறந்தார்.
நெல்லை அருகே உள்ள குறிச்சிகுளத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி இவருடைய மகள் ஜோதி (வயது 14). இவர் சங்கர்நகரில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் ஜோதியின் குடும்பத்தினர் நேற்று முன்தினம் பாலாமடை அருகே உள்ள உதயநேரி பகுதியில் நடந்த ஒரு கோவில் கொடை விழாவுக்காக உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தனர். நேற்று அவர்கள் அந்த பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்றனர். அங்கு ஆற்றில் குளித்தபோது ஜோதி திடீரென தண்ணீரில் மூழ்கி தத்தளித்தார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே ஜோதி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து சீவலப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கோவில் கொடை விழாவிற்கு வந்த மாணவி ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.