போடி அருகே அரசு பஸ்சை சிறைபிடித்து பள்ளி மாணவிகள் மறியல்


போடி அருகே அரசு பஸ்சை சிறைபிடித்து பள்ளி மாணவிகள் மறியல்
x

போடி அருகே அரசு பஸ்சை சிறைபிடித்து பள்ளி மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தேனி

போடி அருகே அரசு பஸ்சை சிறைபிடித்து பள்ளி மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பள்ளி மாணவர்கள்

தேனி மாவட்டம் போடி அருகே உள்ளது நாகலாபுரம் கிராமம். போடியில் இருந்து சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவில் இந்த கிராமம் அமைந்துள்ளது. நாகலாபுரத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள், போடியில் உள்ள பள்ளிகளில் பயின்று வருகின்றனர். இதற்காக அவர்கள் நாகலாபுரத்தில் இருந்து போடிக்கு அரசு பஸ்கள் மூலம் சென்று வருகின்றனர்.

இந்தநிலையில் போடியில் இருந்து நாகலாபுரத்திற்கு கடந்த சில மாதங்களாகவே சரிவர பஸ்கள் இயக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. குறிப்பிட்ட நேரத்திற்கு பஸ்கள் வராததால் பள்ளி மாணவ-மாணவிகள் பள்ளிக்கு சரியான நேரத்திற்கு செல்லமுடியாமல் அவதியடைந்து வருகின்றனர். அதிலும் தேர்வு நேரங்களில் பஸ்கள் சரியான நேரத்திற்கு வராததால் மாணவ-மாணவிகள் தவிக்கும் நிலை உள்ளது.

பஸ்சுக்குள் மழை

எனவே பள்ளி மாணவ-மாணவிகளின் நலன்கருதி நாகலாபுரத்தில் இருந்து போடிக்கு முறையாக பஸ்கள் இயக்க வேண்டும் என்று அரசு போக்குவரத்துக்கழகத்துக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். இருப்பினும் பஸ்கள் தொடர்ந்து குறிப்பிட்ட நேரத்திற்கு இயக்கப்படவில்லை.

மேலும் தற்போது மழைக்காலத்தில் பழுதடைந்த பஸ்கள் இயக்கப்படுவதால், பஸ்சுக்குள் மழைநீர் புகுந்து பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் அவர்களது புத்தகப்பைகள் தண்ணீரில் நனையும் சூழல் உள்ளது. மழையில் நனைந்தபடி செல்வதால் மாணவ-மாணவிகளுக்கு காய்ச்சல் போன்ற உடல்நலம் பாதிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனாலும் அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் இந்த விஷயத்தில் மெத்தனமாக இருந்து வருவதாக மாணவ-மாணவிகள் புகார் தெரிவித்தனர்.

சிறைபிடிப்பு

இந்தநிலையில் போடி செல்வதற்காக இன்று காலை நாகலாபுரத்துக்கு அரசு டவுன் பஸ் ஒன்று வந்தது. அப்போது குறிப்பிட்ட நேரத்திற்கு இயக்கப்படவில்லை என்றுகூறியும், போதிய பஸ்கள் இயக்க வலியுறுத்தியும் அந்த பஸ்சை 50-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் மற்றும் கிராம மக்கள் சிறைபிடித்தனர்.

ஆனால் சம்பவ இடத்திற்கு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் யாரும் வரவில்லை. இதனால் மாணவிகள் பள்ளிக்கு செல்வதில் தாமதம் ஏற்பட்டதால், போடி அரசு போக்குவரத்துக்கழக பணிமனை மேலாளரிடம் கிராம மக்கள் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசினர். அப்போது குறிப்பிட்ட நேரத்தில் பஸ்கள் இயக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். இதையடுத்து பஸ்சை மாணவிகள் விடுவித்தனர். இந்த சம்பவத்தால் நாகலாபுரத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

====

"நீங்கள் மட்டுமா மழையில் நனைகிறீர்கள்; நாங்களும் தான் நனைகிறோம்"; டிரைவர், கண்டக்டர் பதிலால் மாணவிகள் வேதனை

சாலை மறியலின்போது நாகலாபுரத்தை சேர்ந்த பள்ளி மாணவிகள் கூறியதாவது:-

கடந்த சில மாதங்களாகவே காலை, மாலையில் இயக்கப்படும் பஸ்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு வருவது கிடையாது. இதனால் நாங்கள் பள்ளிக்கு காலதாமதமாக செல்லும் நிலை உள்ளது. மேலும் பழுதடைந்த பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் மழைக்காலங்களில் பஸ்சுக்குள் மழைநீர் புகுந்து, நாங்கள் நனைந்தபடி செல்கிறோம். புத்தகப்பைகள், நோட்டு புத்தகங்களும் நனைந்துவிடுகிறது. இதுகுறித்து டிரைவர், கண்டக்டரிடம் முறையிட்டால், "நீங்கள் மட்டுமா மழையில் நனைகிறீர்கள்; நாங்களும் தான் நனைகிறோம்" என்று சொல்கிறார்கள். இதுபோன்று பொறுப்பற்ற முறையில் பதில் அளிப்பது வேதனையாக உள்ளது. எனவே மாவட்ட கலெக்டர் இந்த விஷயத்தில் தலையிட்டு, நாகலாபுரத்திற்கு குறிப்பிட்ட நேரத்திற்கு பஸ்கள் இயக்கவும், கூடுதல் பஸ்களை இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story