தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அரசு விடுதிகளில் சேர பள்ளி மாணவிகள் விண்ணப்பிக்கலாம்


தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அரசு விடுதிகளில் சேர பள்ளி மாணவிகள் விண்ணப்பிக்கலாம்
x

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அரசு விடுதிகளில் சேர பள்ளி மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் அரசு மாணவிகள் விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

அரசு விடுதிகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவிகளுக்கென 13 பள்ளி மாணவியர் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த மாணவியர் விடுதிகளில் 4-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவிகள் சேர்க்கப்படுகின்றனர். அவர்கள் சேர்க்கப்பட்ட பிறகு காலியாக உள்ள இடங்களில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு மற்றும் பாலிடெக்னிக், ஐ.டி.ஐ படிப்புகளில் தங்கி படிக்கும் மாணவிகளை சேர்க்க தமிழக அரசு ஆணைபிறப்பித்து உள்ளது. எனவே பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் விடுதிகளில் அனைத்து வகுப்பை சார்ந்த மாணவியர்களும் குறிப்பிட்ட விகிதாச்சார அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.

தகுதிகள்

இந்த விடுதிகளில் சேருவதற்கு பெற்றோர், பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். தகுதி உடைய மாணவிகள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினிகளிடம் இருந்தோ அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இருந்தோ இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினியிடம் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலஅலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். எனவே மாணவியர் அரசின் இந்த சலுகைகளை பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மேலும் கூடுதல் தகவல்களுக்கு 0461-2341378 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Next Story