புதர்மண்டி கிடக்கும் அரசு பள்ளி மைதானம்
உடுமலையை அடுத்த பெரியவாளவாடி நாராயணசாமி அரசு மேல்நிலைப்பள்ளியில் புதர்மண்டி கிடக்கிறது. இதனை சீரமைக்க மாணவர்கள் மற்றும் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசு மேல்நிலைப்பள்ளி
உடுமலை அடுத்த பெரிய வாளவாடியில் நாராயணசாமி அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு சின்னவாளவாடி, பெரியவாளவாடி, பழையூர் அம்மாபட்டி, வடபூதிநத்தம் மொடக்குப்பட்டி, தீபாலபட்டி உள்ளிட்டு பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகிறார்கள். நடப்பாண்டில் நடைபெற்ற 11 மற்றும் 12 ம் வகுப்பு பொதுத் தேர்வில் இந்தப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சியும் பத்தாம் வகுப்பு தேர்வில் 98 சதவீதம் தேர்ச்சியும் பெற்றது.ஆனால் விளையாட்டில் சாதிக்க முடியாமல் பின்தங்கி உள்ளது.மைதானம் போதிய பராமரிப்பு இல்லாமல் புதர் மண்டி உள்ளதே இதற்கு காரணமாகும்.
விஷ ஜந்துகள்
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
இந்தப் பள்ளி மைதானம் உடுமலை அளவில் புகழ் பெற்றதாகும். குறிப்பாக கோடை விடுமுறையின் போது மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிகள் பரபரப்பாக நடைபெறும். ஆனால் சமீப காலமாக பள்ளி மைதானத்தை பராமரிப்பு செய்வதற்கு நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதில்லை.
இதன் காரணமாக மைதானத்தைச் சுற்றிலும் கால் பகுதி அளவுக்கு புதர் மண்டி விஷஜந்துக்கள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இதனால் அதிர்ச்சி அடையும் மாணவர்கள் விளையாட்டில் சாதிக்க முடியாத சூழல் உள்ளது.
சீரமைக்காதது வேதனை
செல்போன் விளையாட்டில் குழந்தைகள் மூழ்கி வரும் சூழலில் தரமான மைதானம் இருந்தும் அதை முறையாக பராமரிக்காததால் குழந்தைகள் ஓடியாடி வியர்க்க விறுவிறுக்க விளையாட முடியாத சூழல் உள்ளது. மைதானம் சிறப்பாக இருந்து முறையான பயிற்சி கிடைத்தால் கிராமத்து மாணவர்கள் விளையாட்டில் மாவட்ட, மாநில அளவில் சாதிக்கலாம்.
படிப்பும் விளையாட்டும் கலந்ததே பள்ளிப் பருவமாகும். இதனால் படிப்புக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை விளையாட்டுக்கும் அளிக்க வேண்டும். ஆனால் மைதானத்தை சீரமைக்க நிர்வாகம் அக்கறை காட்டாதது வேதனை அளிக்கிறது.
அதிகாரிகள் ஆய்வு செய்வார்களா
மேலும் விளையாட்டுக்கு ஒதுக்கப்படும் நேரம் முறையாக பின்பற்றப்படுகிறதா என்றும் விளையாட்டு உபகரணங்கள் முறையாக மாணவர்களுக்கு வழங்கப்பட்டு பயிற்சி கொடுக்கப்படுகிறதா என்றும் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டி உள்ளது.
எனவே நாராயணசாமி அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தை கோடை விடுமுறை முடிவடைவதற்கு முன்பு சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் படிப்பில் சாதித்த மாணவர்கள் விளையாட்டிலும் சாதிக்க ஏதுவாக இருக்கும் என்று தெரிவித்தனர்.