போக்சோ வழக்கில் பள்ளி தலைமை ஆசிரியருக்கு 14 ஆண்டு ஜெயில்


தினத்தந்தி 27 April 2023 12:15 AM IST (Updated: 27 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் போக்சோ வழக்கில் கைதான பள்ளி தலைமை ஆசிரியருக்கு 14 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தூத்துக்குடி கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டுள்ளது.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் பள்ளி தலைமை ஆசிரியருக்கு 14 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தூத்துக்குடி கோர்ட்டில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

தலைமை ஆசிரியர்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சின்ன கொல்லம்பட்டி பகுதியை சேர்ந்தவர் தாமஸ் சாமுவேல் (வயது 57). இவர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். கடந்த 2022-ம் ஆண்டு, அந்த பள்ளிக்கூடத்தில் படித்த 9 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் கோவில்பட்டி அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தாமஸ் சாமுவேலை கைது செய்தனர். இந்த வழக்கில் 23.6.2022 அன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

14 ஆண்டு ஜெயில்

இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன், குற்றம் சாட்டப்பட்ட தாமஸ் சாமுவேலுக்கு 14 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.

இந்த வழக்கில் சிறப்பாக பணியாற்றிய அப்போதைய துணை போலீஸ் சூப்பிரண்டுகள் உதயசூரியன், சங்கர், கோவில்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மாவதி, அரசு வக்கீல் முத்துலட்சுமி, போலீஸ் ஏட்டு மகேசுவரி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மகேசுவரி ஆகியோரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பாராட்டினார்.


Next Story