கட்டிட வசதி இல்லாததால் ரேஷன் கடையில் இயங்கும் பள்ளி
கங்கைகொண்டானில் கட்டிட வசதி இல்லாததால் ரேஷன் கடையில் பள்ளிக்கூடம் இயங்குகிறது. இதனால் மாணவர்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
மந்தாரக்குப்பம்,
மந்தாரக்குப்பம் கங்கைகொண்டான் பேரூராட்சியில் அரசு ஆரம்ப தொடக்கப்பள்ளிக்கான கட்டிடம் கடந்த 1930-ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த கட்டிடம் பலத்த சேதமடைந்து காணப்பட்டது. கட்டிடம் எந்த நேரத்திலும் இடிந்துவிழும் அபாயம் உருவானதால் மாணவர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டது. இதனால் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப அச்சமடைந்தனர்.
அதனை தொடர்ந்து கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கங்கைகொண்டானில் செயல்படுத்தப்படாமல் பூட்டியே கிடந்த ரேஷன் கடை கட்டிடத்துக்கு பள்ளி மாற்றப்பட்டது. தற்போது பள்ளியில் 10 மாணவர்கள் படித்து வருகின்றனர். ஒரு தலைமை ஆசிரியர், ஒரு உதவி தலைமை ஆசிரியர் பணியாற்றி வருகின்றனர். மாணவர்களுக்கு அருகில் உள்ள பெரியகுறிச்சி அரசு பள்ளியிலிருந்து மதிய உணவு கொண்டு வரப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும் ரேஷன் கடையில் போதிய இடவசதி, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. மேலும் ரேஷன் கடைக்காக குடோன் போன்ற கட்டிடம் கட்டப்பட்டுள்ளதால், அதில் மாணவர்கள் அமர்ந்து படிக்க முடியாமல் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
அதிகாரிகள் அலட்சியம்
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டிக்கொடுக்க வேண்டும் என நாங்கள் கடந்த பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். இருப்பினும் எங்களது கோரிக்கையை அதிகாரிகள் அலட்சியப்படுத்தி வருகின்றனர். பள்ளி மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லாததால், எங்கள் ஊரை சேர்ந்த பலர் தங்களது குழந்தைகளை வெளியூரில் உள்ள பள்ளியில் சேர்த்து வருகின்றனர்.
இதனால் இந்த பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. இதை தவிர்க்க அரசு ஆரம்ப தொடக்கப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டி கொடு்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால், பள்ளியில் கூடுதல் மாணவர்கள் சேர்வார்கள் என்றனர்.