பள்ளி மாணவர் விஷம் குடித்து தற்கொலை
பள்ளி மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
குன்னம்:
பள்ளி மாணவர்
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள திம்மூர் கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன் முருகவேல் (வயது 14). இவர் திம்மூர் அருகே உள்ள சில்லக்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். முருகவேலின் தாய் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.
இதனால் தாயின் அரவணைப்பு இல்லாத நிலையில், சமீப காலமாக முருகவேல் படிக்க விருப்பம் இல்லாமல், சரியாக பள்ளிக்கு செல்லவில்லை என்றும், இதனை சுப்பிரமணியன் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.
தற்கொலை
இதனால் மனமுடைந்த முருகவேல் சம்பவத்தன்று வயலில் அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை(விஷம்) எடுத்து குடித்துள்ளார். பின்னர் முருகவேலுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே, அவரை பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். மேல் சிகிச்சைக்காக அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு முருகவேல், தான் விஷம் குடித்து விட்டதாக டாக்டரிடம் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, திருச்சி அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவில் அவர் இறந்தார். இது குறித்து குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.