பள்ளி மாணவன் தூக்குப் போட்டு தற்கொலை
வேலூர் காகிதப்பட்டறையில் பிளஸ்-1 மாணவன் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டான். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வேலூர் காகிதப்பட்டறையில் பிளஸ்-1 மாணவன் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டான். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பிளஸ்-1 மாணவன்
சென்னை ஆர்.கே.நகர் ஜி.கே.எம்.காலனியை சேர்ந்தவர் சுரேஷ். இவருடைய மகன் சதீஷ் (வயது 19). சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்தான். பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. இதையடுத்து வேலூர் காகிதப்பட்டறை தலையாரி மானியம் தெருவில் வசிக்கும் தாத்தா மனோகரன் வீட்டில் சதீஷ் தங்கி 10-ம் வகுப்பு துணைத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றான். அதைத்தொடர்ந்து சதீஷ் காட்பாடி காங்கேயநல்லூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 வகுப்பில் சேர்ந்தான். தாத்தா வீட்டில் இருந்து தினமும் பள்ளிக்கு சென்று வந்தான்.
தனது வகுப்பில் தன்னைவிட வயது குறைந்தவர்களே படிக்கிறார்கள். வயது குறைந்தவர்களுடன் படிப்பது பிடிக்கவில்லை. அதனால் பள்ளிக்கு செல்ல விருப்பம் இல்லை என்று சதீஷ் அடிக்கடி குடும்பத்தினர், உறவினர்களிடம் கூறியதாவும், அவனுக்கு குடும்பத்தினர் ஆறுதல் கூறி பள்ளிக்கு அனுப்பி வைத்ததாகவும் கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக சதீஷ் மனமுடைந்த நிலையில் காணப்பட்டுள்ளான். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவன் பள்ளிக்கு செல்லவில்லை.
தூக்குப் போட்டு தற்கொலை
வீட்டின் மேல்மாடிக்கு சென்ற சதீஷ் வெகுநேரமாகியும் கீழே வரவில்லை. இதையடுத்து குடும்பத்தினர் மாலை 6 மணியளவில் மாடியில் உள்ள அறைக்கு சென்று பார்த்தனர். அங்குள்ள மின்விசிறியில் சதீஷ் தூக்கில் தொங்கினான். அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், அக்கம், பக்கத்தில் வசிப்பவர்கள் உதவியுடன் உடனடியாக அவனை மீட்டு சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவனை பரிசோதித்த டாக்டர்கள், மாணவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.