மின்னல் தாக்கி பள்ளி மாணவன் பலி
கொண்டலாம்பட்டி:-
சேலம் அருகே மின்னல் தாக்கி பள்ளி மாணவன் பலியானான். தந்தையின் கண் எதிரே இந்த சோக சம்பவம் நடந்துள்ளது.
பள்ளி மாணவன்
சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள நெய்க்காரப்பட்டி கோடி காட்டை சேர்ந்தவர் காமராஜ் (வயது 45), கைத்தறி நெசவு தொழிலாளி. இவருடைய மனைவி சாந்தி (41). இவர்களுக்கு ஹேமலதா என்ற மகளும், கோகுல் குமரன் (12) என்ற மகனும் இருந்தனர்.
இந்த நிலையில் கோகுல் குமரன் கொண்டலாம்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்தான். தற்போது கோடை விடுமுறை விடப்பட்டு உள்ள நிலையில், நேற்று மாலை 5 மணியளவில் வீட்டின் மொட்டை மாடியில் படித்து கொண்டிருந்தான். அப்போது அவருடைய தந்தை அருகிலேயே உட்கார்ந்து இருந்தார்.
மின்னல் தாக்கி பலி
இந்த நிலையில் கருமேக கூட்டம் திரண்டு வந்தது. அப்போது மொட்டை மாடியில் படிக்கட்டின் அருகே நின்று கொண்டிருந்த சிறுவனை மின்னல் தாக்கியது. இதில் அவன் சம்பவ இடத்திலேயே உடல் கருகி இறந்து விட்டான்.
அதே நேரத்தில் மொட்டை மாடியில் மற்றொரு பகுதியில் நின்றுகொண்டிருந்த அவனுடைய தந்தை காமராஜுக்கும் இந்த மின்னல் தாக்கத்தால் சற்று அதிர்ந்து போனாலும், தனது கண் எதிரே மகன் மின்னல் தாக்கி கரிக்கட்டையாக மாறியதை கண்டு கதறி துடித்தார். அவரது சத்தம் கேட்டு அங்கு பொதுமக்கள் திரண்டு வந்தனர். அவர்களும் கரிக்கட்டையாக கிடந்த மாணவனின் உடலை பார்த்து சோகத்தில் ஆழ்ந்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த கொண்டலாம்பட்டி போலீசார் மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேலம் அருகே மின்னல் தாக்கி பள்ளி மாணவன் தந்தை கண் எதிரே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.