6 முதல் 18 வயதுடைய பள்ளிசெல்லா மாணவர்களை கண்டறிய வேண்டும்


6 முதல் 18 வயதுடைய பள்ளிசெல்லா மாணவர்களை கண்டறிய வேண்டும்
x

வீடு, வீடாக சென்று கணக்கெடுத்து 6 முதல் 18 வயதுடைய பள்ளிசெல்லா இடைநின்ற மாணவர்களை கண்டறிய வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலர் பேசினார்.

மயிலாடுதுறை


வீடு, வீடாக சென்று கணக்கெடுத்து 6 முதல் 18 வயதுடைய பள்ளிசெல்லா இடைநின்ற மாணவர்களை கண்டறிய வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலர் பேசினார்.

ஒருங்கிணைப்பு கூட்டம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளிசெல்லா இடைநின்ற மாணவர்களை கணக்கெடுப்பது குறித்து கல்வித்துறை மற்றும் தொடர்புடைய துறைகளுடன் ஒருங்கிணைப்பு கூட்டம் நடந்தது. மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்த கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளிசெல்லா இடைநின்ற மாணவ-மாணவிகளின் விவரங்களை குடியிருப்பு வாரியாக சென்று கணக்கெடுப்பு நடத்த கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையில் 100 சதவீதம் மாணவர் சேர்க்கையை உறுதிப்படுத்தும் வகையில், தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் 6 முதல் 18 வயதுடைய பள்ளிசெல்லா இடைநின்ற மாணவ-மாணவிகள் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களை கண்டறிய சிறப்பு கணக்கெடுப்பு பணி நடத்தப்படுகிறது. இவ்வாறு கண்டறியப்படும் மாணவர்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் கீழ் சிறப்பு பயிற்சி மையங்கள் மூலம் கல்வி வழங்கப்பட்டு வருகிறது.

கணக்கெடுப்பு பணி

இந்த கணக்கெடுப்பு பணி செல்போன் செயலி வாயிலாக கடந்த ஆண்டு நடத்தப்பட்டது. இதன் மூலம் கிடைக்கப்பெற்ற அனுபவங்களிலிருந்து அந்த செல்போன் செயலியில் கூடுதல் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு 2022-2023-ம் ஆண்டுக்கான கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த கணக்கெடுப்பு பணி மூலம் தொடர்ந்து 30 வேலை நாட்கள் எவ்வித முன்னறிப்பும் இன்றி பள்ளிக்கு வராமல் இருக்கும் மாணவர்கள், பள்ளியே செல்லாத மாணவர்கள் மற்றும் பள்ளி இடைநிற்கும் மாணவர்களை அடையாளம் காணவேண்டும்.மாவட்டத்தில் உள்ள அனைத்து குடியிருப்பு பகுதிகளுக்கும் வீடுவாரியாக சென்று இந்த கணக்கெடுப்பு பணி நடத்தப்படவேண்டும். இதில் 6 முதல் 18 வயதுடைய பள்ளிசெல்லா இடைநின்ற மாணவர்களை கண்டறியப்பட வேண்டும்.

ஆய்வு செய்ய வேண்டும்

இந்த பணியில் ஆசிரியர் பயிற்றுனர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், தலைமை ஆசிரியர்கள், கிராமப்புற செவிலியர்கள், சிறப்பு பயிற்றுனர்கள், கல்வி தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டு இருக்கின்றனர். இதற்கான கணக்கெடுக்கும் களப்பணி 11.1.2023 வரை நடக்கிறது. ெரயில் நிலையம், பஸ் நிலையம், உணவகங்கள், குடிசைப்பகுதிகள், கடற்கரையோர பகுதிகளில் வாழும் மீனவ குடியிருப்பு பகுதிகள், விழாக்கள் நடைபெறும் பகுதிகளில் நடக்கும் கணக்கெடுப்பு பணியை கல்வித்துறை, காவல்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் சைல்டு லைன் 1098 ஆகிய துறைகள் இணை ஆய்வு செய்யவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story