பள்ளி மாணவர்களை தேனீக்கள் கொட்டியதால் பரபரப்பு
குடியாத்தம் அருகே பள்ளி மாணவர்களை தேனீக்கள் கொட்டியது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.
குடியாத்தம் அருகே பள்ளி மாணவர்களை தேனீக்கள் கொட்டியது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.
மாணவர்களை தேனீக்கள் கொட்டியது
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த முக்குன்றம் ஊராட்சி காத்தாடிகுப்பம் கிராமத்தில் ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி உள்ளது. பள்ளியில் 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளிக்கு வெளியே புளியமரம் உள்ளது. அந்த மரத்தில் தேனீக்கள் கூடு கட்டி இருந்தது. நேற்று மாலையில் அப்பகுதியை சேர்ந்த சிலர் தேன்கூடு மீது கல்லெறிந்துள்ளனர். இதனால் தேனீக்கள் கலைந்தன. அவற்றில் சில பள்ளிக்குள் புகுந்து அங்கிருந்த மாணவர்களையும், ஒரு ஆசிரியையும் கொட்டியுள்ளது.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை
மாணவர்களின் அலறல் சத்தம் கேட்டு கிராம மக்கள் உடனடியாக அங்கு சென்று மாணவர்களையும், ஆசிரியையும் மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆசிரியை ஜெயந்தியை மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் உதவி கலெக்டர் எம்.வெங்கட்ராமன், தாசில்தார் எஸ்.விஜயகுமார் மற்றும் குடியாத்தம் ஒன்றியக்குழு தலைவர் என்.இ.சத்யானந்தம், அரசு மருத்துவமனை ஆலோசனை குழு உறுப்பினர் கள்ளூர் ரவி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சுரேஷ்குமார், மனோகரன், முன்னாள் ஒன்றியக்குழு துணைத்தலைவர்கள் ரவி, ஏகாம்பரம், தி.மு.க. பிரமுகர்கள் எஸ்.முரளிதரன், யு.லிங்கம் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று மாணவர்கள் மற்றும் ஆசிரியைக்கு ஆறுதல் கூறினார்கள்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.