சாலையில் மழைநீர் தேங்கியதால் பள்ளி மாணவர்கள் அவதி
கொள்ளிடம் அருகே சாலையில் மழைநீர் தேங்கியதால் பள்ளி மாணவர்கள் அவதி அடைந்தனர்.
கொள்ளிடம்:
கொள்ளிடம் அருகே சாலையில்மழைநீர் தேங்கியதால் பள்ளி மாணவர்கள் அவதி.
தொடர்ந்து மழை
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே புத்தூரிலிருந்து மாதிரிவேளூர் செல்லும் சாலை மேம்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று முன் தினம் மாலை முதல் நேற்று காலை வரை தொடர்ந்து மிதமான மழை பெய்து கொண்டே இருந்தது.
தொடர்ந்து பெய்த மழையால் கொள்ளிடம் மாங்கனாம்பட்டு, அரசூர், புத்தூர், மாதானம், புதுப்பட்டினம் உள்ளிட்ட கடை தெருக்களில் சாலைகளில் மழை நீர் தேங்கியது. இந்த பகுதிகளில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் இந்த திடீர் மழையால் பருத்தி பயிர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த மழையால் பருத்தி அறுவடை பணி மேலும் நான்கு அல்லது ஐந்து நாட்கள் தள்ளி போகும் நிலை ஏற்பட்டுள்ளது. மழையினால் பருத்தி விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு அதிக நஷ்டம் அடைந்துள்ளதாக தெரிவித்து வருகின்றனர்.
சாலையில் தேங்கிய மழைநீர்
மேலும் இந்த மழையினால் கொள்ளிடம் பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட செங்கல் சூளை பெரிதும் பாதிக்கப்பட்டது. கொள்ளிடம் பகுதியில் சுமார் 20 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டிருந்த செண்டு பூ பயிரும் பாதிக்கப்பட்டது. மேலும் கொள்ளிடம் அருகே புத்தூரிலிருந்து சோதியக்குடி, சிதம்பரநாதபுரம், கீரங்குடி வழியாக மாதிரவேளூர் செல்லும் சாலை மேம்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், மழை நீர் தேங்கியதால் பள்ளி மாணவர்களுக்கு பெரிதும் இடையூறாக இருந்தது.
இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மிகுந்த அவதி அடைந்ததோடு, நடந்து செல்லும் பள்ளி மாணவர்கள் சேற்றில் வழுக்கி கீழே விழும்நிலை ஏற்ப்பட்டது. கீரங்குடி, சிதம்பரநாதபுரம் ஆகிய பகுதிகளிலிருந்து மாதிரவேளூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு செல்பவர்களும் அங்குள்ள ஆதிதிராவிடர் நலப்பள்ளிக்கு செல்லும் மாணவர்களும் சாலையில் மழை நீர் தேங்கி சேறும் சகதியுமாக மாறியதால் மிகுந்த அவதி அடைந்தனர்.