ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுத்ததால் ஆத்திரம்; கணவரை கத்தியால் குத்த முயன்ற அரசு பள்ளி ஆசிரியை-4 பேர் மீது வழக்கு
பாப்பிரெட்டிப்பட்டி:
பாப்பிரெட்டிப்பட்டி அருகே ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுத்த கணவரை கத்தியால் குத்த முயன்ற அரசு பள்ளி ஆசிரியை உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அரசு பள்ளி ஆசிரியை
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி செம்பூவராயன் கோவில் பகுதியை சேர்ந்தவர் காரல் மார்க்ஸ் (வயது 37). இவரும், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியை சேர்ந்த கண்ணபிரான் மகள் தேவி (38) என்பவரும் கடந்த 2011-ம் ஆண்டு காதலித்து, கலப்பு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இவர்கள் அரூர் கோவிந்தசாமி நகரில் வசித்து வருகின்றனர்.
காரல் மார்க்ஸ் அரூரில் உள்ள தனியார் நீட் கோச்சிங் சென்டரில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். தேவி, கீரைப்பட்டி அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இதனிடையே காரல் மார்க்சும், அரூரை சேர்ந்த ஸ்டாலின் என்பவரும் இணைந்து சோரியம்பட்டியில் பேக்கரி நடத்தி வந்தனர்.
கத்தியால் குத்த முயற்சி
அரசு பள்ளி ஆசிரியை தேவி, பணி நேரம் முடிந்து, பேக்கரியில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அவருக்கும், ஸ்டாலினுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் காரல் மார்க்சுக்கும், தேவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது. இந்தநிலையில் சம்பவத்தன்று காரல் மார்க்ஸ் தேவி வங்கி கணக்கில் இருந்து ஏ.டி.எம். எந்திரம் மூலம் ரூ.40 ஆயிரம் பணம் எடுத்தார்.
இதனை அறிந்த தேவி பாப்பிரெட்டிப்பட்டிக்கு சென்று, காரல் மார்க்சுடன் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. மேலும் தேவி, ஸ்டாலின், இவருடைய மனைவி கலையரசி மற்றும் கோவிந்தசாமி நகரை சேர்ந்த தாஜ் ஆகியோர் காரல் மார்சை திட்டி, அவரை கத்தியால் குத்த முயன்றதாக கூறப்படுகிறது.
4 பேர் மீது வழக்கு
இந்த சம்பவம் குறித்து காரல் மார்க்ஸ் பாப்பிரெட்டிப்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் அரசு பள்ளி ஆசிரியையான தேவி, ஸ்டாலின், கலையரசி, தாஜ் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் ஸ்டாலினை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.