பள்ளி ஆசிரியை மர்மச்சாவு


பள்ளி ஆசிரியை மர்மச்சாவு
x

கலவை அருகே பள்ளி ஆசிரியை மர்மமான முறையில் இறந்தார். அவருடைய சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் தாய் புகார் செய்துள்ளார்.

ராணிப்பேட்டை

பள்ளி ஆசிரியை

ராணிப்பேட்டை மாவட்டம் கலவையை அடுத்த மழையூர் கிராமத்தை சேர்ந்தவர் தனலட்சுமி. இவரது மகள் சுகந்தி. இவர் ஆற்காடு அருகே தாஜ்புரா கூட்ரோட்டில் கணவர் பாலாஜியுடன் வசித்து வந்தார். பாலாஜி செங்கல்பட்டு தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். சுகந்தி ஆற்காடு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலைபார்த்து வந்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.

பாலாஜிக்கு குடிப்பழக்கம் உள்ளதால் சுகந்தியை அடிக்கடி அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 4-ந் தேதி சுகந்தியை அவரது தாய் தனலட்சுமி, மருமகன் பாலாஜியிடம் சொல்லிவிட்டு மழையூரில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். மழையூரில் இருந்து சுகந்தி வேலைக்கு சென்றுள்ளார்.

மர்மச்சாவு

கடந்த 11-ந் தேதி பள்ளியில் ஆண்டு விழா நடப்பதாக சுகந்தி கூறிவிட்டு சென்றுள்ளார். இரவில் ஊருக்கு வர பஸ் இல்லாததால் மற்றொரு பஸ்சில்வந்து கணியனூரில் இறங்கி உள்ளார். அவரை ஏழுமலை என்பவர் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். வீட்டில் சாப்பிட்டுவிட்டு குழந்தையுடன் தூங்க சென்றுள்ளார். மறுநாள் காலையில் சுகந்தி மயங்கிய நிலையில் இருந்துள்ளார்.

அவரை கலவை அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சென்ற சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். அவர் இறந்ததற்கான காரணம் தெரியவில்லை.

இதுகுறித்து சுகந்தியின் தாய் தனலட்சுமி கலவை போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதில் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறியிருக்கிறார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சரவணமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story