அரசுப்பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு சீருடைகள் எப்போது வழங்கப்படும்?- பெற்றோர்கள் எதிர்பார்ப்பு


அரசுப்பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு  சீருடைகள் எப்போது வழங்கப்படும்?- பெற்றோர்கள் எதிர்பார்ப்பு
x

அரசுப்பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு சீருடைகள் எப்போது வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

ஈரோடு

ஈரோடு

அரசுப்பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு சீருடைகள் எப்போது வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

சீருடைகள்

தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிக்கூடங்களில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசு இலவச சீருடைகள் வழங்கி வருகிறது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஒரு ஆண்டுக்கு 4 ஜோடி இலவச சீருடைகள் வழங்கப்பட்டன.

கொரோனா பாதிப்பு காரணமாக 2 ஆண்டுகள் பள்ளிக்கூடங்கள் சரியாக நடத்தப்படாத நிலையில் நடப்பு ஆண்டு (2022-2023) வகுப்புகள் முறையாக தொடங்கி நடந்து வருகின்றன.

வழக்கமாக பள்ளிக்கூடங்கள் திறந்த நாளிலேயே தமிழக அரசு வழங்கும் இலவச பொருட்கள் வழங்கப்படும்.ஆனால், இந்த ஆண்டு பாடப்புத்தகங்கள் கூட குறைந்த அளவிலேயே வழங்கப்பட்டது. பள்ளிக்கூடம் திறந்து சுமார் ஒரு மாதம் ஆகும் நிலையில் நோட்டு புத்தகங்கள் முழுமையாக வழங்கப்படவில்லை.

அதிருப்தி

இந்தநிலையில் இன்னும் மாணவ-மாணவிகளுக்கு சீருடைகள் வழங்கப்படாமல் இருப்பது பெற்றோர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளன.

அரசு பள்ளிக்கூடங்களில் ஏழை மாணவ-மாணவிகள் அதிக எண்ணிக்கையில் படிக்கிறார்கள். கொரோனா காலத்தில் வேலைவாய்ப்பு, வருவாய் இழப்பு ஏற்பட்ட பலரும், தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிக்கூடங்களில் சேர்த்தனர். தற்போது வேலை வாய்ப்புகள் மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பி இருப்பதாலும், பள்ளிக்கூடங்கள் முறையாக நடந்து வருவதாலும், அரசு பள்ளிக்கூடங்களை விட்டு வெளியேறி மீண்டும் தனியார் பள்ளிக்கூடங்களுக்கு சென்று உள்ளனர். எனவே மீண்டும் வேறு வருவாய் இல்லாதவர்கள், பொருளாதார ரீதியாக பின்தங்கி இருப்பவர்கள் மட்டுமே அரசு பள்ளிக்கூடங்களில் படித்து வருகிறார்கள். எனவே இந்த மாணவ-மாணவிகளுக்கு அரசு வழங்கும் இலவச பொருட்கள் மிகவும் அத்தியாவசியமாகும். குறிப்பாக நோட்டு புத்தகம், சீருடை ஆகியவை மிகவும் அத்தியாவசியமானவையாக உள்ளன.

எதிர்பார்ப்பு

ஈரோடு மாவட்டத்தில் பர்கூர் மலைப்பகுதி, கத்திரிமலை, தாளவாடி மலைப்பகுதி மற்றும் மாவட்டத்தின் அனைத்து குக்கிராமங்கள், பின் தங்கிய கிராமங்களில் உள்ள அரசு பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ-மாணவிகள் பழைய சீருடைகளையே அணிந்து வருகிறார்கள். நோட்டு புத்தகங்களை தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலமாகவும், ஆசிரியர்கள் தங்கள் சொந்த நிதியில் இருந்தும் வாங்கிக்கொடுக்கிறார்கள். ஆனால், சீருடைகளை சிறிய தொகையில் வாங்க முடியாது என்பதால் என்ன செய்வது என்று ஆசிரியர்களும் சீருடைகளை அதிகாரிகள் எப்போது வழங்குவார்கள் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

இதுபற்றி பர்கூர் மலைக்கிராமத்தை சேர்ந்த பெற்றோர் கூறும்போது, 'இதுவரை பள்ளிக்கூடங்கள் திறந்ததும் 2 ஜோடி சீருடைகள் வழங்குவார்கள். 3 மாதங்கள் கழித்து இன்னும் 2 ஜோடி வழங்குவார்கள். எங்கள் குழந்தைகள் புதிய ஆடைகள் அணிந்து செல்வது போன்றே இருக்கும். ஆனால், இப்போது பள்ளிக்கூடம் திறந்து பழைய, கிழிந்த சீருடைகள் போட்டு செல்வதை பார்க்கும்போது கவலையாக இருக்கிறது. சீருடை வழங்குவார்களா? இல்லையா? என்பதை தெளிவுப்படுத்த வேண்டும். இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.' என்றனர்.

கோரிக்கை

அரசு பள்ளிக்கூடங்களில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்புவரை ஒரு சீருடையும், 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை ஒரு சீருடையும் உள்ளது. கடந்த ஆண்டு 5-ம் வகுப்பு படித்து தற்போது 6-ம் வகுப்பில் படிக்கும் மாணவ-மாணவிகள் புதிய சீருடைகள் இல்லாததால் 5-ம் வகுப்பில் அணிந்த சீருடையை அணிந்து வருகிறார்கள்.

எனவே விரைவாக சீருடைகள் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story