கார் மீது பள்ளி வேன் மோதல்
கார் மீது பள்ளி வேன் மோதிய விபத்தில் 15 குழந்தைகள் உயிர் தப்பினர்.
கோத்தகிரி,
கோத்தகிரி அருகே செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் பயிலும் குழந்தைகளை அழைத்துக் கொண்டு 2 வேன்கள் மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் டானிங்டன் அருகே நேற்று சென்று கொண்டிருந்தது. அப்போது பின்னால் வந்த பள்ளி வேன் டிரைவர், முன்னால் சென்ற வேனை முந்தி செல்ல முயன்று உள்ளார். அப்போது எதிரே வந்த கார் மீது பள்ளி வேன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் சேதமடைந்தது. விபத்தில் பள்ளி வேனுக்குள் இருந்த 15 குழந்தைகள், ஆசிரியை, டிரைவர் உள்ளிட்டோர் காயம் எதுவும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதே போல காரில் வந்தவர்களுக்கும் காயம் ஏற்படவில்லை. பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்லும் போது, வேன் மற்றும் பஸ் டிரைவர்கள் மிகுந்த கவனத்துடன் வாகனங்களை இயக்க வேண்டும் என பொதுமக்கள் வேன் டிரைவருக்கு அறிவுரை வழங்கி அனுப்பினர். இந்த சம்பவம் குறித்து தேனாடு கிராமத்தை சேர்ந்த கார் டிரைவர் லோகேஸ்வரன் கோத்தகிரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.