விருத்தாசலம் அருகே பள்ளி வாகனங்கள் மோதல்; 17 மாணவர்கள் படுகாயம்- கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு


தினத்தந்தி 12 Oct 2022 12:15 AM IST (Updated: 12 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலம் அருகே பள்ளி வாகனங்கள் மோதிக் கொண்டதில் 17 மாணவர்கள் படுகாயமடைந்தனர். இதை கண்டித்து கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர்

கம்மாபுரம்

வாகனங்கள் மோதல்

விருத்தாசலம் அருகே கோபாலபுரத்தில் தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் பயிலும் பெண்ணாடம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த மாணவ-மாணவிகளை அழைத்து வருவதற்காக நேற்று காலை 2 வாகனங்கள் சென்றன. பின்னர் மாணவ-மாணவிகளை ஏற்றிக்கொண்டு பள்ளி வாகனங்கள் கோ.மாவிடந்தல் அருகே வந்து கொண்டிருந்தன. அப்போது ஒரு வாகனத்தை மற்றொரு வாகனம் முந்திச் செல்ல முயன்ற போது, இரண்டு வாகனங்களும் எதிர்பாராதவிதமாக மோதிக் கொண்டன. இதில் மோதிய வேகத்தில் ஒரு வாகனம் சாலையோரம் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் 8 மாணவிகள் உள்பட 17 மாணவர்களும், டிரைவர் மற்றும் சாலையில் நடந்து சென்ற ஒரு பெண் என மொத்தம் 19 பேர் படுகாயமடைந்தனர்.

சாலை மறியல்

அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே பள்ளி வாகனங்கள் விபத்தில் சிக்கி மாணவர்கள் படுகாயமடைந்தது பற்றி அறிந்த அப்பகுதி மக்கள் திரண்டு வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

போக்குவரத்து பாதிப்பு

இதுபற்றி தகவல் அறிந்த கம்மாபுரம் போலீசார் விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கிராம மக்கள், தங்கள் பகுதியில் அதிவேகமாக செல்லும் பள்ளி வாகனங்களால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இதனால் அதிவேகமாக பள்ளி வாகனங்களை ஓட்டிச் செல்லும் டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். அதற்கு போலீசார், இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதனை ஏற்றுக் கொண்ட கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் சுமார் ¾ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story