46 தனியார் பள்ளி வாகனங்கள் தகுதி இழப்பு
ஆத்தூர் மற்றும் மேட்டூர் வட்டாரத்தில் தனியார் பள்ளி வாகனங்ளை ஆய்வு செய்த வட்டார போக்குவரத்து அதிகாரிகள் 46 வாகனங்களை தகுதி இழப்பு செய்தனர்.
மேட்டூர்
ஆத்தூர் மற்றும் மேட்டூர் வட்டாரத்தில் தனியார் பள்ளி வாகனங்ளை ஆய்வு செய்த வட்டார போக்குவரத்து அதிகாரிகள் 46 வாகனங்களை தகுதி இழப்பு செய்தனர்.
பள்ளி வாகனங்கள் ஆய்வு
ஆத்தூர் வட்டார பகுதியில் உள்ள அனைத்து தனியார், நர்சரி, மெட்ரிக், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் வாகனங்களை ஆண்டுதோறும் ஆத்தூர் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அந்த வகையில் ஆத்தூர் வட்டாரத்தில் உள்ள பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யும் பணி மணிவிழுந்தான் கிராமத்தில் உள்ள பாவேந்தர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று நடைபெற்றது.
இந்த ஆய்வானது, வருவாய் கோட்டாட்சியர் சரண்யா தலைமையில் ஆத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு நாகராஜன், வட்டார போக்குவரத்து அலுவலர் அறிவழகன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. மோட்டார் வாகன ஆய்வாளர் தி.செல்வகுமார் மற்றும் பணியாளர்கள் பள்ளி பஸ்களை ஆய்வு செய்தனர்
20 வாகனங்கள்
ஆத்தூர் வட்டாரத்தில் மொத்தம் உள்ள தனியார் பள்ளிகளுக்கான 497 வாகனங்களில் நேற்று 415 வாகனங்கள் ஆய்வுக்கு உட்பட்படுத்தப்பட்டன. இவற்றில் 20 பள்ளி வாகனங்கள் தகுதி இழப்பு செய்யப்பட்டன.
மேலும் பள்ளி, கல்லூரி வாகனங்களில் தீயணைப்பு கருவி, அவசர வழி, வேகக் கட்டுப்பாட்டு கருவி, வாகனத்தின் படிக்கட்டு உயரம் ஆய்வு செய்யப்பட்டதுடன், முதலுதவி மருந்துகள் உள்ளனவா எனவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வின் போது, போக்குவரத்து துறை சார்பில், பள்ளி வாகன டிரைவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த துண்டுபிரசுரம் வழங்கப்பட்டது. தகுதி இழப்பு செய்யப்பட்ட வாகனங்கள் மீண்டும் ஓரிரு நாளில் மறு ஆய்வுக்கு உட்படுத்தவும், தகுதிச்சான்று பெற்று பிறகு இயக்கப்பட வேண்டும் எனவும் அதிகாரிகள் வற்புறுத்தினர்.
மேட்டூர்
மேட்டூர் வட்டாரத்தில் உள்ள பள்ளி கல்வி நிறுவனங்களின் வாகனங்கள் நேற்று மேட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வட்டார போக்குவரத்து துறையினரால் ஆய்வு செய்யப்பட்டனர். மேட்டூர் உதவி கலெக்டர் தணிகாசலம், போலீஸ் துணை சூப்பிரண்டு விஜயகுமார் ஆகியோர் முன்னிலையில் இந்த ஆய்வு நடந்தது. வட்டார போக்குவரத்து அலுவலர் பாஸ்கரன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் மீனா குமாரி வாகனங்களை ஆய்வு செய்தார்.
வாகனங்களில் முதலுதவி பெட்டி, தீயணைப்பு கருவி, அவசரகால வழித்தடம் ஆகியவை சரியான முறையில் அமைக்கப்பட்டுள்ளதா என்பன உள்பட பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டனர். இதில் 26 பள்ளி வாகனங்களுக்கு பல்வேறு காரணங்களுக்காக தகுதி சான்றிதழ் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆய்வுக்கு வராத கல்வி நிறுவனங்களின் வாகனங்களை வருகிற 31-ந் தேதிக்குள் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு ஆய்விற்கு கொண்டு வர வேண்டும் என வட்டார போக்குவரத்து அலுவலர் பாஸ்கரன் தெரிவித்தார்.