தஞ்சை மாவட்டத்தில் 710 பள்ளி வாகனங்கள் ஆய்வு
தஞ்சை மாவட்டத்தில் 710 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் 16 வாகனங்களின் தகுதி சான்றை ரத்து செய்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
தஞ்சாவூர்;
தஞ்சை மாவட்டத்தில் 710 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் 16 வாகனங்களின் தகுதி சான்றை ரத்து செய்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
பள்ளி வாகனங்கள் ஆய்வு
தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் இயக்கப்படும் வாகனங்கள் ஒவ்வொரு ஆண்டும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. வட்டார போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்புத்துறை சார்பில் பள்ளி வாகனங்களில் வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டள்ளதா? பாதுகாப்பு, தீ தடுப்பு கருவி, முதலுதவி பெட்டி போன்றவை சரியாக உள்ளதா? என ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.அதன்படி இந்த ஆண்டுக்கான ஆய்வு தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, பட்டுக்கோட்டை, கும்பகோணம் ஆகிய இடங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் பள்ளி வாகனங்களை தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
710 வாகனங்கள் ஆய்வு
தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் 265 வாகனங்களும், பட்டுக்கோட்டை வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் 240 வாகனங்களும், கும்பகோணம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் 205 வாகனங்களும் என மாவட்டம் முழுவதும் 710 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.சுப்ரீம் கோர்ட்டு சாலை பாதுகாப்பு குழு அறிவுறுத்தலின்படி பள்ளி வாகனங்களில் இருக்கைககளின் எண்ணிக்கை, வாகனங்களின் உட்புறம் மற்றும் வெளிப்புறம் என எழுதுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்களில் பிரதானமாக அவசர வழி முறையாகவும், அதை திறப்பதில் சிரமம் உள்ளதா? எனவும், தீயணைப்பு கருவிகள், வேகக்கட்டுப்பாட்டு கருவிகள், கண்காணிப்பு கேமரா, டிரைவர்கள் பகுதிகள் உள்ளிட்ட தமிழக அரசு அறிவித்துள்ள அனைத்து விதிமுறைகளும் பின்பற்றப்படுகிறதா? எனவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பள்ளிக் குழந்தைகளை அழைத்து செல்லும் டிரைவர்கள் கவனமுடன் செல்ல வேண்டும், வேகமாகவும், போட்டி போட்டுக் கொண்டு செல்லக் கூடாது. பின்புறம் செல்லும் போது, ஒலிப்பான் பொருத்தியிருக்க வேண்டும்.
16 வாகனங்களுக்கு தகுதிச்சான்று ரத்து
இந்த ஆய்வில் ஒரு வாகனத்தில் அவசர வழி கதவு சரியில்லாததால், அதனை சீர் செய்யும் வரை அந்த வாகனத்தை இயக்க கூடாது என உத்தரவிட்டுள்ளேன்.பள்ளி வாகனங்கள் விதிமுறைக்குட்பட்டு இருந்தால் தான் அனுமதிக்கூடாது. அரசு அறிவித்துள்ள அனைத்து விதிமுறைகளும் பின்பற்றாத வாகனங்களுக்கு அபராதம் விதிப்பதுடன், இயக்குவதற்கு அனுமதிக்கமாட்டோம்.அதன்படி தஞ்சையில் 9 வாகனங்களுக்கும், கும்பகோணத்தில் 5 வாகனங்களுக்கும், பட்டுக்கோட்டையில் 2 வாகனங்களுக்கும் தகுதிச்சான்று தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனை சரி செய்து ஆய்வுக்குட்படுத்திய பிறகு இந்த வாகனங்களுக்கு தகுதிச்சான்று புதுப்பித்து தரப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.ஆய்வின் போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத், மாவட்ட தீயணைப்பு அலுவலர் குமார், வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன், மோட்டார்வாகன ஆய்வாளர் ஆனந்த், முதன்மைக்கல்வி அதிகாரி சிவக்குமார், மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) அமலா, போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.