வருசநாடு அருகே கனமழைக்கு இடிந்து விழுந்த பள்ளி சுற்றுச்சுவர்
வருசநாடு அருகே கனமழைக்கு பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.
தேனி மாவட்டம் வருசநாடு அருகே கீழபூசணூத்து கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 65 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தநிலையில் வருசநாடு பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு பாண்டாரவூத்து கிராமத்தில் பெய்த கனமழையால் அரசு தொடக்கப்பள்ளியில், பூசணூத்து ஓடையின் அருகே அமைக்கப்பட்டிருந்த சுற்றுச்சுவரின் ஒரு பகுதி இடிந்து விழந்தது. அந்த நேரத்தில் சுற்றுச்சுவரின் அருகில் மாணவ-மாணவிகள் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
தற்போது பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த பகுதிக்கும், ஓடைக்கும் சில அடிகள் தொலைவு மட்டுமே உள்ளது. இதனால் ஓடையில் நீர்வரத்து ஏற்பட்டால் மண் அரிப்பு காரணமாக வகுப்பறை கட்டிடம் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த கடமலை-மயிலை ஒன்றியக்குழு தலைவர் சித்ரா சுரேஷ் மற்றும் ஆணையாளர்கள் திருப்பதி முத்து, அய்யப்பன் ஆகியோர் நேற்று பள்ளிக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது பள்ளி சுற்றுச்சுவர் கட்டிடத்தை உடனடியாக சீரமைக்க ஒன்றியக்குழு தலைவர் உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது ஒன்றிய பொறியாளர் ராமமூர்த்தி, கவுன்சிலர்கள் கவிதா துரைப்பாண்டி, ஆயுதவள்ளி மணிமாறன் ஆகியோர் உடன் இருந்தனர்.