மின்சாரம் தாக்கி பள்ளி மாணவி பலி
ஜோலார்பேட்டை அருகே குளிப்பதற்கு வெந்நீர் வைத்த மின்சாரம் தாக்கி பள்ளி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.
ஜோலார்பேட்டை அருகே குளிப்பதற்கு வெந்நீர் வைத்த மின்சாரம் தாக்கி பள்ளி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.
பிளஸ்-2 மாணவி
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த சின்னமூக்கனூர் பெருமாள்சாமி கோவில் வட்டம் பகுதியை சேர்ந்தவர் ரத்தினவேல். இவரது மகள் ரத்னாதேவி (வயது 17). தாமலேரி முத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவரது பெற்றோர்கள் புதுச்சேரி பகுதியில் தங்கி கட்டிட வேலை செய்து வருகின்றனர். இதனால் ரத்னா தேவி பாட்டி பானுமதி பராமரிப்பில் இருந்து வந்தார்.
இந்தநிலையில் ரத்னாதேவி குளிப்பதற்காக வெந்நீர் வைப்பதற்காக குடத்தில் தண்ணீர் பிடித்து அதில் ஹீட்டரை போட்டுள்ளார். சிறிது நேரம் கழித்து குடத்தை தூக்கும் போது மின்சாரம் தாக்கி உடல் கருகிய நிலையில் கிடந்துள்ளார்.
மின்சாரம் தாக்கி பலி
கடைக்கு சென்று திரும்பிய அவரது சகோதரர் சக்திவேல் கைகளில் ஹீட்டருடன் ரத்னா தேவி விழுந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சல் போட்டுள்ளார். அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது ரத்னா தேவி மின்சாரம் தாக்கி இறந்திருப்பது தெரியவந்தது.
இதனை அடுத்து மின் இணைப்பை துண்டித்து, ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.