கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறப்பு
6 முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு கோடை விடுமுறை முடிந்து, இன்று (திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. முதல் நாளில் பாடப்புத்தகங்கள், நோட்டுகள் உள்பட இலவச கல்வி உபகரணங்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கின்றன.
சென்னை,
2022-23-ம் கல்வியாண்டுக்கான ஆண்டு இறுதித்தேர்வு, பொதுத்தேர்வு அனைத்தும் நடத்தி முடிக்கப்பட்டு, மாணவ-மாணவிகளுக்கு கோடை விடுமுறையும் அளிக்கப்பட்டன. விடுமுறை காலத்தில் அவர்கள் தேர்வில் பெற்ற தேர்ச்சியையும் கல்வித்துறை வெளியிட்டுவிட்டது.
இந்த நிலையில் கோடை விடுமுறை முடிந்து 6 முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு ஜூன் 1-ந் தேதியும், 1 முதல் 5-ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு ஜூன் 5-ந் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது.
கோடை வெயிலின் தாக்கம் கடந்த மாதம் (மே) இறுதியில் அதிகமாக இருந்ததால், பள்ளிகள் திறப்பு தேதி தள்ளிவைக்க வாய்ப்பு இருப்பதாக பேசப்பட்டது. அதன்படி, ஜூன் 7-ந் தேதி 1 முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று கல்வித்துறை அறிவித்தது.
பள்ளிகள் திறப்பு
ஆனால் கடந்த மாதம் இறுதியில் வெயிலின் கோரத்தாண்டவம் தொடங்கி, இந்த மாதம் தொடக்கத்தில் உக்கிரத்தை காட்டியது. தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் வெயில் 100 டிகிரியை கடந்து பதிவானது. அனல் காற்றும் சேர்ந்து வீசியதால் மக்களை வாட்டி வதைத்தது.
இதனை கருத்தில் கொண்டு, கடந்த 7-ந் தேதி திறக்கப்படுவதாக இருந்த பள்ளி திறப்பு தேதி 2-வது முறையாக தள்ளி வைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது. அந்த வகையில், 6 முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு 12-ந் தேதியும் (இன்றும்), 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு 14-ந் தேதியும் (நாளை மறுதினம்) பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
கல்வித்துறையின் அறிவிப்பின்படி, 6 முதல் பிளஸ்-2 வகுப்புக்கு இன்று (திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதையொட்டி, மாணவ-மாணவிகளின் பெற்றோர், பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்பிவைக்க இருக்கின்றனர்.
பாடப்புத்தகங்கள் வழங்க ஏற்பாடு
இதையொட்டி, அவர்களுக்கு தேவையான புத்தக பை, வாட்டர் பாட்டில், டிபன் பாக்ஸ் உள்பட பள்ளிக்கு கொண்டு செல்வதற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள கடைகளில் பெற்றோர், மாணவ-மாணவிகளின் கூட்டம் அலைமோதியது.
பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் அரசு பள்ளிகளில் முதல் நாளில் இலவச பாடப்புத்தகங்கள், நோட்டுகள் உள்பட கல்வி உபகரணங்கள் வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் கல்வித்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
சில தனியார் பள்ளிகள் வருகிற 14-ந் தேதி (புதன்கிழமை) முதல் திறக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், வெயிலின் தாக்கம் இன்னும் குறையாமல் இருப்பதால், மீண்டும் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகுமா? என்ற எதிர்பார்ப்பில் மாணவ-மாணவிகள் செய்திகளில் அதுபோன்ற தகவல் எதுவும் வருகிறதா? என்று தேடிய நிகழ்வும் நேற்று அரங்கேறின.