கோத்தகிரி அருகே அறிவியல் திருவிழா
கோத்தகிரி அருகே அறிவியல் திருவிழா
கோத்தகிரி
கோத்தகிரி வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் கோத்தகிரி வட்டார மேற்பார்வையாளரின் வழிகாட்டுதலின்படி, 'ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழா' கோத்தகிரி வட்டாரத்தில் உள்ள கிராமங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. இல்லம் தேடி கல்வி மற்றும் வானவில் மன்றம் சார்பாக கடந்த ஏழு நாட்களாக வள்ளுவர் காலனி, குண்டாடா, கப்பட்டி, கட்டபெட்டு, பாரதிநகர், இந்திராநகர், காக்காசோலை கிராமங்களில் ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழா கொண்டாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து 7- ம் நாளாக கோத்தர் பழங்குடியின கிராமமான புது கோத்தகிரி பகுதியில் "ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழா" கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியை புதுக்கோத்தகிரி ஊர் பூசாரி கிருஷ்ணன் தொடங்கி வைத்தார். இல்லம் தேடிக் கல்வி வட்டார ஆசிரிய ஒருங்கிணைப்பாளர் ஹேரி உத்தம் சிங் அனைவரையும் வரவேற்றார். வானவில் மன்றத்தை சேர்ந்த பிரின்சி மற்றும் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர் பூர்ணிமா ஆகியோர் கருத்தாளர்களாக செயல்பட்டு அறிவியல் சோதனைகளை மிகவும் சிறப்பாக செயல் விளக்கம் மூலமாக மாணவர்களுக்கு செய்து காண்பித்து அவர்களிடையே அறிவியல் ஆர்வத்தினை ஏற்படுத்தினர். தன்னார்வலர் சிவப்பிரியாஜோதி ஏற்பாடு செய்திருந்தார். புது கோத்தகிரி கிராம மக்கள் தங்களது பாரம்பரிய உடையில் கலந்து கொண்டு அறிவியல் திருவிழாவை சிறப்பித்தனர். முடிவில் இல்லம் தேடிக் கல்வி வட்டார ஆசிரிய ஒருங்கிணைப்பாளர் ஆனந்தன் நன்றி கூறினார்.