கொளுத்தும் கோடை வெயிலை சமாளிக்கும் வழிமுறைகள்
கொளுத்திவரும் கோடை வெயிலை எவ்வாறு சமாளிப்பது குறித்து டாக்டர்கள், பொதுமக்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
அக்னி நட்சத்திரம் தொடங்கியது முதல் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. சென்னை உள்பட பல மாவட்டங்களில் தினமும் வெயில் சதமடித்துக் கொண்டிருக்கிறது. அனல் காற்று வீசுகிறது.
கோடை வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பித்து கொள்வதற்காக சிலர் ஊட்டி, கொடைக்கானல் போன்ற குளிர்பிரதேசங்களை தேடி செல்கின்றனர். பலர் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். கோடை வெப்பத்தில் இருந்து பிள்ளைகளை காத்து கொள்வதற்காக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.
வெப்பத்தால் ஏற்படும் வியர்வை மூலமாக உடலில் இருந்து வெளியேறும் உப்பு சத்துகளை ஈடு செய்வதற்காக நீர் மோர், பதநீர், நுங்கு, இளநீர், தர்பூசணி, எலுமிச்சை சாறு மற்றும் பழச்சாற்றை அருந்தும்படி ஆலோசனை வழங்கப்படுகிறது.
கொளுத்திவரும் கோடை வெயிலை பொதுமக்கள் எவ்வாறு சமாளித்து வருகிறார்கள் என்பது பற்றி சிலரிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் அளித்த பதில் விவரம் வருமாறு:-
கண்நோய் வர வாய்ப்பு
நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி உதவி பேராசிரியர் டாக்டர் மோகனவேல் கூறியதாவது:-
கோடை வெயிலின்போது நமது உடலில் உள்ள நீர்ச்சத்து குறையும். உடலில் அதிக வியர்வை ஏற்படுவதாலும், சுற்றுச்சூழல் வெப்பம் அதிகமாக உள்ளதாலும் இந்த நீர் இழப்பு ஏற்படுகிறது. இதனால் நமது உடலில் வெப்பம் அதிகமாகவே இருக்கும். இதன் காரணமாக நமக்கு நீர்க்கடுப்பு, வேர்க்குரு, பெரியம்மை, தசைப்பிடிப்பு போன்ற பிரச்சினைகள் எளிதில் ஏற்படலாம். தண்ணீர் பற்றாக்குறை மற்றும் மாசடைந்த குடிநீரின் உபயோகத்தால் வாந்தி பேதி, மூட்டு வலி பிரச்சினைகள் அதிகமாகலாம். உடலில் கட்டிகள், அரிப்பு, அழுக்கு தேமல் போன்றவை ஏற்படும்.
கோடை வெப்பத்தை தவிர்ப்பதற்கு தினமும் குறைந்தது 3 முதல் 4 லிட்டர் நீர் ஆகாரங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். போதுமான அளவு குளிர்ந்த குடிநீர், மோர், இளநீர், பழரச வகைகள் போன்றவை மிகவும் உதவும். நீர்ச்சத்து அதிகம் உள்ள காய்கறிகளான தர்பூசணி, வெள்ளரிக்காய், முட்டைக்கோஸ், சர்க்கரை வள்ளி கிழங்கு, பச்சை காய்கறிகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதேபோல் கண் நோய், கண்ணில் எரிச்சல், கண்ணில் நீர் வருவது, கண் உலர்ந்து போதல் போன்ற பிரச்சினைகள் கோடை காலத்தில் ஏற்படுவது சகஜம். குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் அதிக நேரம் சூரிய ஒளியின் கீழ் இருப்பதை தவிர்ப்பது நல்லது. உடலில் நீர்ச்சத்து அதிகமாக இழப்பதால் ஹீட் ஸ்ட்ரோக் எனப்படும் ஆபத்தான பிரச்சினை வரவும் வாய்ப்பு உள்ளது. இதனால் தலைவலி, மயக்கம், உடல் சோர்வு, அதிக வியர்வை ஏற்படுத்தல், கடைசியில் வலிப்பு மற்றும் உயிரிழப்பு வரை கொண்டு செல்ல வாய்ப்பு உள்ளது.
குளிர்பானங்கள் விற்பனை அதிகரிப்பு
திருச்செங்கோட்டில் சாலையோர குளிர்பான கடை நடத்தி வரும் ஜஸ்வந்த் சிங்:-
நான் கடந்த 8 ஆண்டுகளாக ஐஸ்கிரீம், எலுமிச்சை ஜூஸ், பாதாம் பால், ஜிகர்தண்டா, மாம்பழ ஜூஸ், சோடா வகைகள் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட குளிர்பானங்களை விற்று வருகிறேன். இங்கு ஆண்டு முழுவதும் வியாபாரம் செய்து வருகிறோம். ஆனால் கோடை காலங்களில் அதிக அளவில் மக்கள் எங்கள் கடைக்கு தேடி வந்து குளிர்பானங்களை குடிப்பார்கள.
உடல் வெப்பத்தை குறைக்கும் வகையில் குளிர்பானங்கள் இருப்பதால் கோடை காலத்தில் அதிகமான அளவில் வியாபாரம் நடைபெறும். நாங்கள் உடலுக்கு ஆரோக்கியமாக இருக்கக்கூடிய பொருட்களை தான் பயன்படுத்தி வருகிறோம். தரம் மற்றும் சுவை நன்றாக இருப்பதால் அதிக அளவில் மக்கள் விரும்பி வந்து எங்களது குளிர்பானங்களை குடித்து வருகின்றனர்.
வெப்பத்தை குறைக்க வேண்டும்
நாமக்கல்லை சேர்ந்த சித்த மருத்துவர் பூபதிராஜா:-
அண்டத்தில் (பூமியில்) சூரியனின் வெப்பத்தாக்கம் அதிகரிப்பால், பிண்டத்தில் (உடலில்) வெப்பத் தாக்கம் அதிகரிக்கிறது. குறிப்பாக குழந்தைகளும், வயது மூத்தோர்களும் அதிகமாக வெப்பத்தினால் பாதிப்பு அடைய வாய்ப்பு உள்ளது. தினமும் இருமுறை குளிப்பது சாலச்சிறந்தது. வெப்பத்தாக்கத்திற்கு தகுந்தாற்போல் உடல் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் சிறுநீர் எரிச்சல், சிறுநீர் கடுப்பு, சிறுநீரக கல்அடைப்பு, வெள்ளைபடுதல், மூலக்கடுப்பு, மூலநோய், அம்மைநோய், கண் எரிச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை தவிர்க்க இயற்கையாக கோடை காலத்தில் விளையும் இளநீர், நுங்கு, தர்பூசணி, வெள்ளரி பழம் எடுத்துக் கொண்டால் போதும்.
கோடைகாலத்தில் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், சீரக தைலம், கரிசிலாங்கண்ணி தைலம், நெய்சட்டி கீரைதைலம், குளிர் தாமரைதைலம், சந்தனாதி தைலம் ஆகியவற்றை தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் வெப்பம் தணியும். வெப்பம் அதிகரிக்க கண்ணை பாதிக்கும். கண்ணை பாதுகாக்க எண்ணெய் தேய்த்து குளிப்பது சிறந்தது.
பானையில் தண்ணீர் ஊற்றி, வெட்டிவேர் சேர்த்து குடித்து வந்தால் சிறுநீர் எரிச்சல் வராமல் தடுக்கலாம். நீராகாரத்தில் கற்றாழை சோறு சேர்த்து குடித்துவர பெண்களுக்கு வயிற்றுபுண், வெள்ளைபடுதல், சிறுநீர் எரிச்சல் குணமாகும். கோடையில் அம்மைநோய் வராமல் தடுக்க கம்பு தயிர்சாதம், மோர்சாதம் சாப்பிட்டு வர வேண்டும். தண்ணீரில் பனங்கற்கண்டு சேர்த்து குடிக்க வேண்டும்.
உணவு பழக்கம்
நாமக்கல் அருகே உள்ள கூலிப்பட்டியை சேர்ந்த ஜமுனா ராணி:-
கோடை என்றாலே விடுமுறை கொண்டாட்டம் ஒரு புறம் இருந்தாலும், மறுபுறம் கோடை வெப்பத்தின் தாக்கம் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. அதுவும் நாளுக்கு நாள் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் உணவு பழக்கத்தையும் சற்று மாற்றி வருகிறேன். தண்ணீர் ஆகாரத்தை தான் அதிகம் சாப்பிட்டு வருகிறேன்.
மருத்துவர்கள் கூறியபடி தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே எங்கும் செல்வதில்லை. பழங்கள் மற்றும் கீரைகளையும் அதிகம் பயன்படுத்துவதால் பெரிய அளவில் கோடை வெப்பத்தால் பாதிக்கப்படவில்லை. இன்றும் ஓரிரு மாதங்களில் இதே உணவு பழக்கத்தை தான் கடைப்பிடிப்பேன்.
பதநீர், நுங்கு சாப்பிடலாம்
எருமப்பட்டியை சேர்ந்த பேராசிரியர் ராஜ்குமார்:-
கோடை வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிப்பதற்காக தினசரி பதநீர், நுங்கு வாங்கி சாப்பிடுகிறேன். இதுதவிர வீட்டில் எலுமிச்சை பழ ஜூஸ் அடிக்கடி குடித்து வருகிறேன். அதேபோல் எங்கள் வீட்டில் உள்ள அனைவரும் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டுள்ள குடிநீரை சுத்தமாக பயன்படுத்துவதில்லை. வெதுவெதுப்பான குடிநீரை தான் பயன்படுத்துகிறோம்.
இதுதவிர குழந்தைகளுக்கும் தேவையில்லாதவற்றை வாங்கி தருவதைவிட கோடைக்கு ஏற்ற தர்பூசணி பழம், முலாம்பழம் போன்றவற்றை வாங்கி தருகிறோம். கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கொரோனா காலத்தில் வழங்கிய போது வாய்ப்புள்ள நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு வீட்டில் இருந்தே பணி செய்ய உத்தரவிடலாம். இதன் மூலம் ஓரளவு கோடையின் தாக்கத்தில் இருந்து பொதுமக்களை காக்க முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதற்கிடையே நாமக்கல் மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கியது முதலே விட்டுவிட்டு அவ்வப்போது கோடை மழை பெய்வது சற்று ஆறுதல் அளிப்பதாக உள்ளது.
மத்திய, மாநில சுகாதாரத்துறை அறிவுரை
கோடைக்கால நோய்களை தவிர்க்கவும், வெப்பத்தாக்கத்தில் இருந்து மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் மத்திய, மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தல்கள் விடுத்து வருகின்றன. அந்த வகையில் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பின்பற்ற வேண்டிய எளிய சில வழிமுறைகளை அறிவித்து உள்ளன.
குறிப்பாக நடப்பு ஆண்டு சுட்டெரிக்கும் வெயிலின் அளவு அதிகமாக இருக்கும் என்றும், வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதால் வெப்ப அலை தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்வதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடுவது அவசியமானது. வெயிலில் அதிக நேரம் செல்ல வேண்டிய நிலைமை இருந்தால் வெப்பத்தை தடுக்கும் ஆடைகளை அணியுங்கள். குறிப்பாக பருத்தி ஆடைகளே சிறந்தது. அடர் நிறம் மற்றும் இறுக்கமான ஆடைகள் அணிவதை தவிருங்கள். சன்ஸ்கிரீன் பூசுவதற்கு மறக்காதீர்கள். மதுபானம் அருந்துவதை முற்றிலும் தவிருங்கள். மது அதிகம் அருந்தினால் நீரிழப்பை ஏற்படுத்தும். இதனால் வெப்ப பக்கவாதத்தால் பாதிக்கப்படக்கூடிய நிலை உருவாகும்.
மருத்துவ உதவியை நாடுங்கள்
வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் சூழலில் மிக கடுமையான உடல் உழைப்பில் ஈடுபடாதீர்கள். மின்சார உபகரணங்களை அதிகமாக பயன்படுத்தாதீர்கள். அவையும் வெப்பத்தை உருவாக்கி வீட்டின் வெப்பநிலையை அதிகரித்துவிடும். வெயில் காலத்தில் ஏற்படும் தலைச்சுற்றல், குமட்டல், உடல் சோர்வு, உடல் பலவீனம் போன்ற அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீர்கள். அவை வெப்ப பக்கவாதத்திற்கான எச்சரிக்கை அறிகுறிகளாக இருக்கலாம். தேவைப்பட்டால் மருத்துவ உதவியை நாடுங்கள்.
போதுமான அளவு தண்ணீர் குடிக்க மறக்காதீர்கள். இல்லாவிட்டால் நீரிழப்புக்கு ஆளாக வேண்டியிருக்கும். மொட்டை மாடி போன்ற கான்கிரீட் தளம் கொண்ட மேற்பரப்புகளில் அதிக நேரத்தை செலவிடாதீர்கள். அவை சூரியனின் கதிர்களை அதிகம் பிரதிபலிக்கும். உங்கள் உடலை சட்டென்று வெப்பமாக்கிவிடும். பகல் வேளையில் வீட்டின் ஜன்னல்களை மூடிய நிலையில் வைக்காதீர்கள். ஏனெனில் இது வெப்பத்தை அதிகப்படுத்தி அறையை இன்னும் சூடாக மாற்றும்.
அதிக நேரம் சூரிய ஒளி
வெயில் காலத்தில் நீர் நிலைகளில் நீந்துவது உடலை இதமாக்கும். எனினும் பாதுகாப்பான சூழல் கொண்ட நீர்நிலைதானா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். வெயில்படும்படியான இடத்தில் வைக்கப்பட்டிருக்கும் உலோகப் பொருட்களைத் தொடாதீர்கள். அவை அதிக வெப்பமடைந்து தீக்காயங்களை ஏற்படுத்தும். முகம் மற்றும் கண்களை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க தொப்பி, கண்ணாடி அணிய மறக்காதீர்கள். கொழுப்பு அதிகம் உள்ள உணவுகள், செரிமானம் ஆவதற்கு கடினமான உணவுகளை உண்ணாதீர்கள்.
ஏனென்றால் இந்த உணவுகள் மந்தமாக உணர வைக்கும். மேலும் உடலின் வெப்பநிலையை அதிகரிக்க செய்துவிடும். அதிக நேரம் சூரிய ஒளி சருமத்தில் படும்படி வைத்துக்கொள்ளாதீர்கள். அது தோல் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும் என்று அறிவுறுத்தி உள்ளது.