சட்டமன்ற பேரவை மனுக்கள் குழுவினர் ஆய்வு
தேனி மாவட்டத்தில் சட்டமன்ற பேரவை மனுக்கள் குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.
சட்டமன்ற குழு ஆய்வு
தமிழக சட்டமன்ற பேரவை மனுக்கள் குழுவினர் தேனி மாவட்டத்துக்கு நேற்று வந்தனர். மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இந்த குழுவினர் ஆய்வுப் பணிகள் மேற்கொண்டனர். குழுவின் தலைவரான தமிழக அரசு தலைமை கொறடா கோவி.செழியன் தலைமையில், உறுப்பினர்களான எம்.எல்.ஏ.க்கள் அய்யப்பன் (கடலூர்), கார்த்திகேயன் (வேலூர்), பாபு (செய்யூர்), பொன்னுச்சாமி (சேந்தமங்கலம்), முத்துராஜா (புதுக்கோட்டை) ஆகியோர் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.
அவர்களுடன் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா, பெரியகுளம் எம்.எல்.ஏ. சரவணக் குமார், ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ. மகாராஜன் மற்றும் அரசின் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இந்த குழுவினர் ஆய்வு செய்தனர். ஆய்வின் போது அங்கு துர்நாற்றம் வீசியதால், ஆய்வுக்குழுவினர் மற்றும் அதிகாரிகள் முக கவசம் அணிந்து பங்கேற்றனர்.
குறைகளை அடுக்கிய மாணவ, மாணவிகள்
பின்னர் ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குன்னூர் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் சட்டமன்ற பேரவை மனுக்கள் குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது பள்ளிக்கு வெளியே கழிவுநீர் தேங்கி நின்று சுகாதாரக்கேடாக காட்சியளித்தது. அதைப் பார்த்த சட்டமன்ற குழுவினர், சுகாதாரக்கேடாக இருப்பதை சுட்டிக் காட்டி அதிகாரிகளை கண்டித்தனர். அப்போது பாபு எம்.எல்.ஏ. 'ஆதிதிராவிடர் நல பள்ளி என்பதால் அதிகாரிகள் அலட்சியமாக இருக்கிறீர்களா?' என்று கேள்வி எழுப்பினார்.
பின்னர் வகுப்பறைக்கு சென்று மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினர். அப்போது மாணவ, மாணவிகளிடம் குறைகள் கேட்டறிந்தனர். சட்டமன்ற குழுவினரிடம் மாணவ, மாணவிகள் கூறும்போது, "எங்கள் பள்ளிக்கு விளையாட்டு மைதானம் வசதி வேண்டும். உடற்கல்வி ஆசிரியர் நியமிக்க வேண்டும். இரவு மற்றும் விடுமுறை நாட்களில் சமூக விரோதிகள் சிலர் பள்ளிக்குள் புகுந்து மது அருந்துகின்றனர். மதுபான பாட்டில்களை உடைத்து போட்டு செல்கின்றனர். பள்ளிக்கு வரும்போது நாங்கள் தான் அவற்றையெல்லாம் சுத்தம் செய்கின்றோம். சுகாதார மற்றும் பாதுகாப்பு வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்" என்றனர்.
இதைக்கேட்ட குழுவினர் ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளை கண்டித்தனர். மேலும் வகுப்பறையில் வெளிச்சம் குறைவாக உள்ளதால் கூடுதல் மின்விளக்குகள் பொருத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.
ஆய்வுக்கூட்டம்
அதைத்தொடர்ந்து வைகை அணை அருகில் உள்ள சர்க்கரை ஆலை, சோத்துப்பாறை அருகில் பாசன வாய்க்கால் சீரமைப்பு பணிகள், பெரியகுளம் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் புதிய சிகிச்சை பிரிவு கட்டுமான பணி, மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் எதிரே பயணிகள் நிழற்குடை ஆகியவற்றை சட்டமன்ற பேரவை மனுக்கள் குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
ஆய்வைத் தொடர்ந்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலக கூட்டரங்கில், சட்டமன்ற பேரவை மனுக்கள் குழுவின் ஆய்வுக்கூட்டம் நடந்தது. இந்த குழுவினருக்கு மனுக்கள் அனுப்பிய மனுதாரர்கள் பலர் இதில் கலந்துகொண்டனர். மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வுக்கூட்டத்தில் அரசின் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.