முன்விரோதத்தில் தகராறு; தந்தை-மகனுக்கு அரிவாள் வெட்டு
முன்விரோதத்தில் ஏற்பட்ட தகராறில் தந்தை-மகனுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள மதுக்காரம்பட்டியை சேர்ந்தவர் பழனியாண்டி (வயது 55). விவசாயி. அவருடைய தம்பி வெள்ளைச்சாமி (48). இவர்கள் 2 பேருக்கும் இடையே பொதுப்பாதையை பயன்படுத்துவது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் அவர்கள் 2 பேருக்கும் இடையே இன்று மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வெள்ளைச்சாமி, அவரது மகன் சந்தோஷ் ஆகியோர் சேர்ந்து பழனியாண்டி மற்றும் அவரது மகன் அழகரை (35) அரிவாளால் வெட்டினர். இதில் காயமடைந்த பழனியாண்டியும், அழகரும் ரத்தகாயத்துடன் திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு புகார் அளிக்க சென்றனர்.
அப்போது அவர்களிடம் விசாரணை நடத்திய போலீசார், தந்தை-மகனை சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர்கள் கொடுத்த புகாரின்பேரில் நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.