கள்ளக்காதல் விவகாரத்தில் பயங்கர ஆயுதங்களுடன் இருதரப்பினர் மோதல்; 15 பேருக்கு அரிவாள் வெட்டு


கள்ளக்காதல் விவகாரத்தில் பயங்கர ஆயுதங்களுடன் இருதரப்பினர் மோதல்; 15 பேருக்கு அரிவாள் வெட்டு
x
தினத்தந்தி 11 March 2023 2:00 AM IST (Updated: 11 March 2023 2:00 AM IST)
t-max-icont-min-icon

நத்தம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் இருதரப்பினர் பயங்கர ஆயுதங்களுடன் மோதிக்கொண்டதில் 15 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

திண்டுக்கல்

நத்தம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் இருதரப்பினர் பயங்கர ஆயுதங்களுடன் மோதிக்கொண்டதில் 15 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

கள்ளக்காதல்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 30 வயது பெண் தனியாக வசித்து வருகிறார். அவரது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையே அந்த பெண்ணுக்கும், அதே ஊரை சேர்ந்த 21 வயது வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அந்த பழக்கம் கள்ளக்காதலாக உருவானது. இதையடுத்து 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர்.

இதுகுறித்து அறிந்த வாலிபரின் பெற்றோர், அவரை கண்டித்தனர். இதனால் அந்த வாலிபர், அந்த பெண்ணிடம் பேசுவதை தவிர்த்து வந்தார். இந்தநிலையில் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி வாலிபரிடம், அந்த பெண் வற்புறுத்தினார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார். மேலும் இதுகுறித்து அந்த வாலிபர் தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.

பயங்கர ஆயுதங்களுடன் மோதல்

இந்தநிலையில் வாலிபரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று முன்தினம் அந்த பெண்ணிடம் தகராறு செய்தனர். இதனை பார்த்த பெண்ணின் உறவினர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது 2 தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. மேலும் இருதரப்பை சேர்ந்தவர்கள் அரிவாள், கடப்பாரை உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களாலும், கம்பு, உருட்டுக்கட்ைடகளாலும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். அப்போது இருதரப்பையும் சேர்ந்த 15 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

இதில் காயமடைந்த கருப்பாயி, சுந்தரபாண்டி உள்பட 4 பேர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையிலும், திருமாயி, சுந்தர், சித்ரா, முருகன், சுரேஷ்குமார் ஆகிய 5 பேர் மதுரை அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும் 6 பேர் நத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

போலீஸ் பாதுகாப்பு

இதுகுறித்து அறிந்த நத்தம் போலீஸ்-இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். அதேபோல் நத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து இருதரப்பினரும் போலீசில் தனித்தனியாக புகார் அளித்தனர். அதன்பேரில் இருதரப்பையும் சேர்ந்த 14 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த கிராமத்தில் பதற்றமான சூழல் நிலவுவதால் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இருதரப்பினர் மோதலில் 15 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் நத்தம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story