சொத்து தகராறில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு
தா.பழூர் அருகே சொத்து தகராறில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இந்த சம்பவம் தொடர்பாக 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கோடாலி வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் அஜித்குமார் (வயது 21). அதே பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் மகன் செல்வராசு (60). உறவினர்களான இவர்கள் 2 பேருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று செல்வராசு மற்றும் அஜித்குமார் ஆகியோர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதில் இருதரப்பை சேர்ந்தவர்களும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். பின்னர் அஜித்குமார், செல்வராசு ஆகியோர் அரிவாளால் வெட்டிக்கொண்டனர். இதில் பலத்த காயம் அடைந்த அவர்கள் 2 பேரும் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து அவர்கள் 2 பேரும் கொடுத்த புகாரின் பேரில் தா.பழூர் சப்- இன்ஸ்பெக்டர் வேல்முருகன் இருதரப்பை சேர்ந்த செல்வராசு, அஜித்குமார், கொளஞ்சிநாதன் (36), ரமேஷ் (22), ராஜேந்திரன் (55), ஜெயா (50) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.