முன்னாள் ராணுவ வீரருக்கு அரிவாள் வெட்டுகிராமமக்கள், போலீஸ் கமிஷனரிடம் மனு
முன்னாள் ராணுவ வீரருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக கிராமமக்கள், போலீஸ் கமிஷனரிடம் மனு கொடுத்தனர்.
பணகுடி அருகே மருதப்பபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் திரவியம் மகன் ரமேஷ். முன்னாள் ராணுவ வீரரான இவர் தற்போது நெல்லை ஸ்ரீபுரத்தில் உள்ள தனியார் உணவு விடுதியில் மேலாளராக வேலை செய்து வருகிறார். இவர்களது ஊரில் உள்ள சுடலை மாடசாமி கோவிலில் கடந்த 24-ந்தேதி கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது இரு தரப்பினருக்கு இடையே தகராறு ஏற்பட்டு, இரு தரப்பினர் மீதும் பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ரமேஷ் ஸ்ரீபுரத்தில் உணவு விடுதியில் வேலை முடிந்து சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை மர்மநபர்கள் அரிவாளால் வெட்டினர். இதில் காயமடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிலையில் மருதப்பபுரம் கிராமத்தை சேர்ந்த 25-க்கும் மேற்பட்டோர் நேற்று நெல்லை மாகநர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து, கமிஷனர் ராஜேந்திரனிடம் மனு அளித்தனர்.
பின்னர் அவர்கள் கூறுகையில், ''எங்களது ஊரில் சுடலை மாடசாமி கோவில் வரிதாரர்களாக 110 பேர் உள்ளோம். அதில் 109 பேர் ஒற்றுமையாக கோவில் கும்பாபிஷேக விழாவை நடத்தினோம். ஒரே ஒரு குடும்பத்தினர் மட்டும் தொடர்ந்து பிரச்சினை செய்து வருகின்றனர். அந்த தரப்பினர் தற்போது கூலிப்படையினரை கொண்டு ரமேஷ் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி உள்ளனர். அவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர்.