லாரி டிரைவர்களுக்கு அரிவாள் வெட்டு; 2 பேர் கைது


லாரி டிரைவர்களுக்கு அரிவாள் வெட்டு; 2 பேர் கைது
x

ஆலங்குடியில் 2 லாரி டிரைவர்களை அரிவாளால் வெட்டிய 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தப்பி ஓடிய 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

புதுக்கோட்டை

லாரி டிரைவர்கள்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள மணகொல்லையை சேர்ந்தவர் குமாரவேல் (வயது 30). இவரும், அதே பகுதியை சேர்ந்த இவரது உறவினரான சூர்யா (23), தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு தாலுகா, நெய்வேலி தென்பாதி செட்டிகொல்லையை சேர்ந்த பழனிவேல் (38) ஆகியோர் பாப்பான்விடுதியில் உள்ள தனியார் தேங்காய் நார் தொழிற்சாலையில் லாரி டிரைவர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு 1.30 மணியளவில் ஆலங்குடி சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள ஒரு டீக்கடைக்கு சென்றுள்ளனர். அப்போது, அங்கு நெம்மக்கோட்டையை சேர்ந்த மார்த்தாண்டன், வீரகணேஷ், ஆலங்குடி கம்பர் தெருவை சேர்ந்த பிரகாஷ் (25), சூரன் விடுதியை சேர்ந்த லெனின் (20) உள்பட 6 பேர் டீ குடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது, குமாரவேல் இவர்களை இடித்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது.

அரிவாள் வெட்டு

இதனால் இருதரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மார்த்தாண்டன், பிரகாஷ், லெனின் உள்பட 6 பேரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் குமாரவேல் மற்றும் பழனிவேலை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றனர். இதில், படுகாயம் அடைந்த 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். பின்னர், பழனிவேல் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதையடுத்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே உத்தரவின் பேரில் தப்பி ஓடிய கும்பலை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

2 பேர் சிறையில் அடைப்பு

இதனைதொடர்ந்து ஆலங்குடி இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) உஷா நந்தினி, சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தப்பி ஓடிய பிரகாஷ், லெனின் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரும் ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விஜயபாரதி முன்பு ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் தப்பியோடிய மார்த்தாண்டன் உள்பட 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story