போக்சோ வழக்கில் சாட்சி கூறியவருக்கு அரிவாள் வெட்டு
போக்சோ வழக்கில் சாட்சி கூறியவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
திருவெறும்பூர்:
தொழிலாளி
திருவெறும்பூர் அருகே உள்ள காந்தளூர் கள்ளத்தெருவை சேர்ந்தவர் பரமசிவம்(வயது 55). விவசாய தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்த செல்லையா மகன் மணிகண்டன்(28). கடந்த 3 மாதங்களுக்கு முன்பு போக்சோ வழக்கில் மணிகண்டனுக்கு எதிராக பரமசிவம் சாட்சி கூறியுள்ளார்.
இந்த வழக்கில் மணிகண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பின்னர் மணிகண்டன் ஜாமீனில் வெளியே வந்தார். மேலும் பரமசிவம் மீது செல்லையாவும், மணிகண்டனும் விரோதத்துடன் இருந்ததாக தெரிகிறது.
அரிவாளால் வெட்டினர்
இந்த நிலையில் நேற்று காலை காந்தலூர் பகுதியில் உள்ள திட்டக்குளத்தில் மீன் வாங்குவதற்காக பரமசிவம் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த செல்லையாவும், மணிகண்டனும் பரமசிவத்திடம் தகராறு செய்து, அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இதைக்கண்ட அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் பரமசிவத்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வலைவீச்சு
இச்சம்பவம் குறித்து நவல்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்லையா மற்றும் மணிகண்டனை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.