பணம் கேட்டு தகராறு செய்த நண்பருக்கு அரிவாள் வெட்டு


பணம் கேட்டு தகராறு செய்த நண்பருக்கு அரிவாள் வெட்டு
x

பட்டுக்கோட்டையில் பணம் கேட்டு தகராறு செய்த நண்பரை அரிவாளால் வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர்

பட்டுக்கோட்டையில் பணம் கேட்டு தகராறு செய்த நண்பரை அரிவாளால் வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

அரிவாள் வெட்டு

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை மணியார்புரம் பகுதியை சேர்ந்தவர் வைத்தியநாதன். இவருடைய மகன் மணிரத்தினம் (வயது 30). இவரும் பட்டுக்கோட்டை அண்ணாநகர் பகுதியை சேர்ந்த முருகன் மகன் விஜயராகவன் (26) என்பவரும் நண்பர்கள். விஜயராகவன் பட்டுக்கோட்டையில் உள்ள பூக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று மணிரத்தினம், விஜயராகவன் வேலை பார்க்கும் பூக்கடைக்கு சென்று அவரிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதில் இருவருக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக கோபமடைந்த விஜயராகவன் கடையில் இருந்த அரிவாளை எடுத்து மணிரத்னத்தின் தலை, கழுத்து, கை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டி விட்டு ஓடிவிட்டார்.

ஆஸ்பத்திரியில் அனுமதி

படுகாயம் அடைந்த மணிரத்தினத்தை அருகில் உள்ளவர்கள் மீட்டு பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்றவர், மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து மணிரத்தினத்தின் சித்தப்பா விஸ்வநாதன் பட்டுக்கோட்டை நகர போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விஜய ராகவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story