உபரிநீர் கடலில் கலந்து வீணாகிறது
வைகை அணையில் இருந்து உபரி நீர் முறையாக திட்ட மிடாத காரணத்தினால் ராமநாதபுரம் பெரிய கண்மாய் வழியாக கடலில் கலந்து வீணாகிறது. இந்த நீரை கண்மாய் களுக்கு திருப்பிவிட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வைகை அணையில் இருந்து உபரி நீர் முறையாக திட்ட மிடாத காரணத்தினால் ராமநாதபுரம் பெரிய கண்மாய் வழியாக கடலில் கலந்து வீணாகிறது. இந்த நீரை கண்மாய் களுக்கு திருப்பிவிட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
70 அடி தண்ணீர்
வைகை அணையின் மொத்த கொள்ளளவு 71 அடி என்ற நிலையில் தொடர் மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து தற்போது மீண்டும் 70 அடியை எட்டி உள்ளது. தற்போது அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் அணையின் பாதுகாப்பு கருதி உள்வரும் அனைத்து நீரையும் வெளியேற்றி வருகின்றனர்.
இதனால் வைகை ஆற்றின் வழியாக உபரிநீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. வைகை அணையில் இருந்து திறந்து விடப்பட்டு உள்ள உபரி நீர் விரகனூர் பகுதியில் வலது இடது பிரதான கால்வாய்களுக்கும், அதன்பின்னர் ராமநாதபுரம் வரும் வழியில் உள்ள கண்மாய்களுக்கும் எடுத்து வருகின்றனர்.
உபரிநீர்
வைகை ஆற்று பகுதியில் நீர் வந்து ஈரப்பதமாகவும் தண்ணீர் தேங்கிய நிலையிலும் உள்ளதால் சராசரியாக சுமார் 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் ராமநாதபுரம் நோக்கி வந்த வண்ணம் உள்ளது. ராமநாதபுரம் பெரிய கண்மாய், சக்கரக்கோட்டை கண்மாய் ஆகியவை முழு கொள்ளளவை எட்டியதால் உபரிநீரை ராமநாதபுரத்திற்கு வரும் வழியில் மஞ்சுவலசை பகுதியில் திருப்பி கொண்டு சென்று களரி கண்மாயை நிரப்ப உள்ளதாக பொதுப்பணித்தறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் அதற்கு மாறாக ராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கு தண்ணீரை கொண்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன்காரணமாக பெரிய கண்மாய் மதகில் இருந்து சக்கரக்கோட்டை கண்மாய் வழியாகவும், காவனூர் தரைப்பாலம் வழியாக புல்லங்குடி முதல் கடலில் கலந்து தண்ணீர் வீணாகி வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.
அதற்கு ஏற்ப ராமநாதபுரம் பெரிய கண்மாயில் ஒரு சில மதகுகள் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேறி வருவதாக கூறப்படுகிறது. காவனூர் பாலம் வழியாக தண்ணீர் வேகமாக சென்று கொண்டிருக்கிறது. மாவட்டத்தில் பல கண்மாய்கள் குறிப்பாக களரி கண்மாய் மற்றும் அதன் வழியில் உள்ள பெரும்பாலான கண்மாய்கள் தண்ணீரின்றி உள்ள நிலையில் தேவையின்றி தண்ணீரை பெரிய கண்மாய்க்கு கொண்டு சென்றது ஏன் என்றும், நீரின்றி உள்ள கண்மாய்களை நிரப்ப பொதுப்பணித்துறையினர் தவறிவிட்டதாக விவசாயிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.
நடவடிக்கை
களரி கண்மாயை நிரப்புவதாக கூறிவரும் அதிகாரிகள் அதற்கான உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்ட நீர்நிலைகளின் தன்மை குறித்து அறியாத வேறு ஊர்களில் உள்ள உயர் அதிகாரிகள் உத்தரவின்படி இவ்வாறு நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரி களிடம் கேட்டபோது கூறியதாவது:- உபரிநீர் வந்து கொண்டிருக்கும் வேளையில் பாதுகாப்பு கருதியும், வழிப் பாதைகள் தன்மை கருதியும் அதில் களரி கண்மாய்க்கு ஆயிரம் கனஅடி அளவில்தான் திருப்பி கொண்டு செல்ல முடியும். அதற்குமேல் கொண்டு செல்ல முடியாது.
இவ்வாறு களரி கண்மாய்க்கு 20 சதவீதம் தண்ணீர் கொண்டு சேர்க்கப்பட்டு உள்ளது.
அதன்வழிவரும் கண்மாய்களில் முக்கால் கொள்ளளவை எட்டிய கண்மாய்கள் அடைத்து தண்ணீரை முழுமையாக கொண்டு செல்ல ஏற்பாடு செய்து வருகிறோம்.
ராமநாதபுரம் பெரிய கண்மாயில் இருந்து நீர்நிலைகளுக்கு தண்ணீர் எடுக்கப்பட்டதால் குறைந்த சுமார் முக்கால் அடி தண்ணீரை தற்போது கொண்டு சென்றதன் மூலம் மீண்டும் முழு கொள்ளளவை எட்டி உள்ளது. இதனை தொடர்ந்து மீதம் உள்ள தண்ணீரை காவனூர் வழியாக புல்லங்குடி, தொருவளூர், அம்மாரி கண்மாய்களுக்கு கொண்டு சென்று வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினர்.