குடியிருப்புகளை நெருங்கி வந்த கடல்
கடல் சீற்றம் காரணமாக பாம்பனில் மீனவ குடியிருப்புகளை கடல் நீர் நெருங்கி வந்து காட்சி தருகிறது.
பாம்பன்,
கடல் சீற்றம் காரணமாக பாம்பனில் மீனவ குடியிருப்புகளை கடல் நீர் நெருங்கி வந்து காட்சி தருகிறது.
கடல் சீற்றம்
தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையை தொடர்ந்து மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 60 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் பலத்த காற்று வீசும் மற்றும் கடல் சீற்றமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
இந்த நிலையில் ராமேசுவரம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதலே பலத்த சூறை காற்று வீசி வருவதுடன் கடல் சீற்றமாக காணப்பட்டு வருகிறது. மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல நேற்று முதல் தடை விதிக்கப்பட்டது. 800-க்கும் அதிகமான விசைப்படகுகள், 600-க்கும் மேற்பட்ட நாட்டு படகுகள் கரையோர கடல் பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
பாம்பன்
இதே போல் பாம்பன் பகுதியிலும் நேற்று அதிகாலை முதலே வழக்கத்திற்கு மாறாக பலத்த காற்று வீசி வருவதுடன் கடல் சீற்றமாக உள்ளது. குறிப்பாக தென்கடலான மன்னார் வளைகுடாவில் சீற்றம் அதிகமாக இருப்பதுடன், தெற்குவாடி துறைமுக கடற்கரையையொட்டி உள்ள மீனவ குடியிருப்புகளை கடல் நீர் நெருங்கி வந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சில வீடுகளுக்குள் கடல்நீர் புகுந்துவிடும் நிலையும் ஏற்பட்டது. எனவே மணல் மூடைகளை அந்த பகுதியில் மீனவர்கள் அடுக்கி வைத்து தடுப்பு ஏற்படுத்தினர். பாம்பனிலும் 500-க்கும் மேற்பட்ட நாட்டு படகுகளும், 80-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 200-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளும் கடலுக்கு செல்லவில்லை. அவை பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டன.