திருமுல்லைவாசல் கடற்கரையோரம் குடியிருப்புகளில் கடல் அரிப்பு


திருமுல்லைவாசல் கடற்கரையோரம் குடியிருப்புகளில் கடல் அரிப்பு
x
தினத்தந்தி 8 Jan 2023 12:15 AM IST (Updated: 8 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருமுல்லைவாசல் கடற்கரையோரம் உள்ள குடியிருப்புகளில் கடல் அரிப்பு ஏற்பட்டது. இதனை தடுக்க உடனடியாக கருங்கற்கள் கொட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை

சீர்காழி:

திருமுல்லைவாசல் கடற்கரையோரம் உள்ள குடியிருப்புகளில் கடல் அரிப்பு ஏற்பட்டது. இதனை தடுக்க உடனடியாக கருங்கற்கள் கொட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடல் அரிப்பு

மயிலாடுதுறை மாவட்டம் நீண்ட கடற்கரையை கொண்ட மாவட்டமாகும். கொடியம்பாளையம் முதல் தரங்கம்பாடி வரை 50-க்கும் மேற்பட்ட கடற்கரை கிராமங்களை கொண்ட மாவட்டம் ஆகும். இந்த மாவட்டத்தில் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் கடற்கரை உள்ளது. இந்த கடற்கரை ஓரம் மேட்டுத்தெரு, ஆற்றங்கரை தெரு, பள்ளிவாசல் தெரு உள்ளிட்ட ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளாக கடலில் சீற்றம் அதிகரிப்பதன் காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டு கடற்கரையோரம் உள்ள சாலைகள் மற்றும் குடியிருப்புகள், பள்ளிவாசல் உள்ளிட்ட இடங்கள் கடல் நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளது. மேலும் மேட்டு தெரு, பள்ளிவாசல் தெரு உள்ளிட்ட தெருக்களில் உள்ள குடியிருப்புகள் கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டு வருகின்றன.

இதை தடுக்கும் வகையில் இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடலில் கருங்கற்களை கொட்ட வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கருங்கற்களை கொட்ட வேண்டும்

இதுகுறித்து மேட்டுத்தெருவை சேர்ந்த மகாலிங்கம் கூறுகையில், ஆண்டாண்டு காலமாக திருமுல்லைவாசல் கடற்கரை ஓரம் குடியிருந்து வருகிறோம். இந்த நிலையில் சுனாமிக்கு பின்னர் கடலில் அவ்வப்போது ஏற்படும் மாற்றம் காரணமாக அடிக்கடி கடல் நீர் ஊருக்குள் புகுந்து வருகிறது. மேலும் கடல் அரிப்பால் கடந்த சில ஆண்டுகளாக திருமுல்லைவாசல் கடற்கரையோரம் உள்ள மேட்டுத்தெரு, பள்ளிவாசல் உள்ளிட்ட இடங்களில் உள்ள குடியிருப்புகள், சாலைகள் கடல் நீரில் அடித்துச்செல்லப்பட்டு விட்டது.

கடந்த 3 மாதத்திற்குள் கடல் அலை அரித்ததால் சுமார் 50 மீட்டர் அளவு இடம் கடலுக்குள் சென்று விட்டது. இதனை தடுக்கும் வகையில் தமிழக அரசு உடனடியாக மேற்கண்ட இடங்களில் உள்ள கடற்கரை பகுதிகளில் கருங்கற்களை கொட்டி கடல் அரிப்பை தடுக்க வேண்டும். இல்லை என்றால் இந்த பகுதியில் உள்ள அனைத்து குடியிருப்புகளும் கடலுக்குள் சென்று விடும் என்றார்.

கடலின் பரப்பு அதிகரிப்பு

சீர்காழி அருகே திருமுல்லைவாசல் பகுதியை சேர்ந்த ஸ்டீபன் ராஜ் கூறுகையில், திருமுல்லைவாசல் கடற்கரை ஓரம் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த நிலையில் பருவநிலை மாற்றம், அடிக்கடி ராட்சச அலைகள் காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டு குடியிருப்புகள், சாலைகள், மரங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன.

நாளுக்கு நாள் குடியிருப்பு பகுதிகள் குறைந்து கடலின் பரப்பு அதிகரித்து வருகிறது. இதனால் கடற்கரையையொட்டி உள்ள கிராமமக்கள் மழைக்காலங்களில் அச்சத்தோடு வாழ வேண்டிய நிலை இருந்து வருகிறது. கடற்கரை ஓரம் கருங்கற்கள் கொட்டாதன் விளைவாக ஊருக்குள் தண்ணீர் புகுந்து குடியிருப்புகளில் கடல் நீர் சூழ்ந்து காணப்படுகிறது. இதனை தடுக்கும் வகையில் கடற்கரை ஓரம் குடியிருப்பு பகுதிகளில் சுமார் 300 மீட்டர் அளவு கருங்கற்கள் கொட்ட வேண்டும். இல்லையென்றால் கடலோரம் குடியிருக்கும் பொதுமக்கள், வர்த்தகர்கள் மாற்று இடத்திற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்றார்.


Next Story