கடல் மீன்கள் விலை உயர்வு
தடைகாலம் முடிந்தும் திண்டுக்கல்லுக்கு வரத்து அதிகரிக்காததால் கடல் மீன்களின் விலை உயர்ந்துள்ளது. இதனால் அசைவ பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கடல்மீன்கள் குறைவு
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 14-ந் தேதி வரை மீன்பிடி தடைகாலம் அமலில் இருந்தது. அப்போது கடல் மீன்கள் வரத்து மிகவும் குறைந்தது. அதையடுத்து மீன் பிடி தடைகாலம் முடிந்து மீனவர்கள் கடலுக்கு செல்ல தொடங்கியதும், மீன்கள் வரத்து அதிகரிக்க தொடங்கியது. ஆனால் திண்டுக்கல்லுக்கு 50 சதவீத அளவுக்கு மட்டுமே கடல் மீன்கள் வருகின்றன.
திண்டுக்கல்லில் சோலைஹால் மீன் மார்க்கெட், என்.ஜி.ஓ.காலனி, ஆர்.எம்.காலனி, நத்தம் சாலை, தெற்குரதவீதி, ரவுண்டுரோடு உள்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் கடல் மீன் கடைகள் உள்ளன. இந்த மீன்கடைகளில் நேற்றும் குறைந்த அளவே கடல் மீன்கள் விற்பனைக்கு வந்தன. அதேநேரம் அணைகள், குளங்களில் பிடிக்கப்படும் மீன்கள், வளர்ப்பு மீன்கள் அதிக அளவில் வந்தன.
விலை உயர்வு
இதனால் கடல் மீன்களின் விலை நேற்றும் குறையாமல் அதிகரித்து காணப்பட்டது. திண்டுக்கல்லில் நேற்றைய தினம் வஞ்சிரம் கிலோ ரூ.800 முதல் ரூ.1,300-க்கும், கொடுவா ரூ.650-க்கும், முரள், ஊளி, கிழங்கா, பாறை, மாவுளா, உருட்டுநகரை, விளைமீன் ஆகியவை கிலோ தலா ரூ.400-க்கும், காரல், நெத்திலி ரூ.300-க்கும் விற்கப்பட்டது.
அதேநேரம் குளம், அணைகளில் பிடிக்கப்படும் ஜிலேபி ரூ.100-க்கும், பாறை, கட்லா தலா ரூ.150-க்கும் விற்றது. மீன்பிடி தடைகாலம் முடிந்ததும் கடல்மீன்கள் அதிகமாக வரும் என்று பலரும் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் தடைகாலம் முடிந்து 25 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் கடல்மீன்கள் வரத்து அதிகரிக்காமல், மீன்களின் விலை அதிகரித்து இருப்பது அசைவ பிரியர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.