கடல்வழி பயணம் காலத்தின் கட்டாயம்
கப்பல்கள், படகுகள் மூலமாக ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கடல் வழியாக செல்லும் போக்குவரத்து உள்நாட்டு அளவில் அதிக பயன்பாடுகள் இல்லாமல் இருந்தாலும், சர்வதேச அளவில் மிக முக்கியப் போக்குவரத்தாக இருக்கிறது.
தமிழ்நாடு
தமிழ்நாட்டில் சென்னை துறைமுகம், எண்ணூர் காமராஜர் துறைமுகம், துத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் போன்றவை முக்கியத்துவம் வாய்ந்தவை ஆகும். சென்னை துறைமுகம் வழியாக கார், தோல் பொருட்கள், ஆயத்த ஆடைகள், ரசாயனங்கள், ஆட்டோ மொபைல் உதிரி பாகங்கள் மற்றும் பொறியியல் எந்திரங்களின் உதிரி பாகங்கள் ஆகியவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அதேபோல், உணவுப் பொருட்கள், உரங்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் ஆகியவை முக்கிய இறக்குமதி செய்யப்படுகின்றன. எண்ணூர் காமராஜர் துறைமுகத்தின் மூலம் நிலக்கரி, பெட்ரோலியப் பொருட்கள், வேதியியல் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. வ.உ.சி. துறைமுகம் மூலம் உணவு, மாட்டுத் தீவனம், கனிமங்கள், சமையல் எண்ணெய், சிமெண்ட் போன்றவை கையாளப்படுகின்றன.
பயணிகள் கப்பல்
துறைமுகங்கள் மூலம் சரக்கு போக்குவரத்து நடந்து வந்தாலும், பயணிகள் போக்குவரத்து இதுவரை தமிழ்நாட்டில் சாத்தியப்படாமலே இருந்து வருகிறது.
எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்த போது, சென்னை, புதுச்சேரி, காரைக்கால் வழியாக கன்னியாகுமரிக்கு மிதவைப் படகு (ஹோவர்கிராப்ட்) போக்குவரத்தை தொடங்கத்திட்டம் தீட்டினார். இதுதொடர்பாக ஜப்பானில் உள்ள நிறுவனத்திடமும் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டது. அதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் அந்த திட்டம் ஏனோ செயல் வடிவம் பெறவில்லை.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள் நலன் கருதி தற்போது பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வரும் நிலையில், சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து திட்டத்தையும் நிறைவேற்றித் தரவேண்டும் என்பது தமிழ்நாட்டு மக்களின் குரலாக இருக்கிறது. இதுகுறித்து பொதுமக்களிடம் கேட்டபோது அவர்கள் தெரிவித்த கருத்துகள் பின்வருமாறு:-
வசதியாக இருக்கும்
பெரம்பலூர் துறைமங்கலம் கே.கே.நகரை சேர்ந்த கவுதம்:- தற்போது தமிழ்நாட்டில் சாலை போக்குவரத்து நிறைந்து காணப்படுகிறது. ரெயில் போக்குவரத்து வசதியும் உள்ளது. முக்கிய நகரங்களில் வான் வழி போக்குவரத்தும் உள்ளது. ஆனால் தமிழகத்தில் கடல் வழி துறைமுகங்கள் மூலம் சரக்கு போக்குவரத்து நடந்து வந்தாலும், கடல் வழி பயணிகள் கப்பல் போக்குவரத்து இதுவரை இல்லாதது மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக திகழும் தமிழ்நாட்டிற்கு பெரிய குறையாக உள்ளது. தமிழ்நாட்டில் கடல் வழி பயணிகள் போக்குவரத்து தொடங்க சாத்தியக்கூறுகள் இருப்பதாக கூறப்படுகிறது. இன்றைய காலக்கட்டத்தில் தமிழ்நாட்டில் கடல் வழி பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கினால் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பொதுமக்களுக்கு செல்ல இன்னும் வசதியாக இருக்கும். மக்களுக்கு பல்வேறு அரசு திட்டங்களை செய்து வரும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு கடல் வழி பயணிகள் கப்பல் போக்குவரத்து திட்டத்தை தொடங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கையாக உள்ளது.
எரிபொருள் சிக்கனம்
அரியலூர் அருகே உள்ள அயனாத்தூரை சேர்ந்த தலைமை ஆசிரியர் குமார்:- சங்க காலந்தொட்டே கடல்வழிப் போக்குவரத்து வழியாக வாணிபம் மற்றும் பயணங்களுக்கு தமிழ்நாடு முன்னோடியாக விளங்கி வருகிறது. தற்போது தரைவழிப்போக்குவரத்து அதிக எரிபொருள் செலவுடன் கால விரயமும் அதிகமாக உள்ளது. சாலை விரிவாக்கம் செய்யும் போது பல்வேறு இடங்களில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அன்றாட வாழ்க்கையில் போக்குவரத்து மிகமிக முக்கிய பங்காற்றுகிறது. கடல்வழி போக்குவரத்து எரிபொருள் சிக்கனம் மற்றும் குறைந்த காலத்தில் இருப்பதுடன் மிகவும் பாதுகாப்பானதாக உள்ளது. நதிகளை இணைத்தல் மற்றும் கடல்வழிப்போக்குவரத்தை ஒருங்கிணைத்தால் வருங்காலத்தில் தமிழ்நாடு பொருளாதார தன்னிறைவு பெற்ற மாநிலமாக மாறும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. ஆயத்தப்பணிகள் முன்னரே நடைபெற்றுள்ளதால் நவீனமயமாக்கி கடல்போக்குவரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க தற்போதைய அரசு முன்வர வேண்டும்.
மாசற்ற சூழல் உருவாகும்
அரியலூரை சேர்ந்த வக்கீல் சிவம்:- பயணிகள் கப்பல் போக்குவரத்து தமிழகத்திற்கும் தமிழனுக்கும் புதியது அல்ல. கப்பலோட்டிய தமிழன் என்ற பெருமை கொண்ட வ.உ.சி. வாழ்ந்தது தமிழ் மண்ணில் தான். கடல் வழி போக்குவரத்து தமிழகத்திற்கு மேலும் ஒரு மகுடமாக அமையும் என்பதில் இருவேறு கருத்துகளுக்கு இடம் இல்லை. சென்னையில் ரெயிலில் ஏறி தனுஷ்கோடி சென்று அங்கிருந்து தினசரி கப்பல் போக்குவரத்தை வெகு காலத்திற்கு முன்பாகவே செவ்வனே செய்து வந்த தமிழனுக்கு வங்க கடலில் இருந்து முக்கடல் சங்கமத்திற்கு நீர் வழி போக்குவரத்து உல்லாசத்திற்கும், வணிகத்திற்கும் வழி செய்யும் இன்றியமையாத போக்குவரத்து ஆகும். இதன் வழி போக்குவரத்து சாலை நெரிசல் மற்றும் மாசற்ற சூழல் உருவாகும். சின்ன சின்ன நீர்வழி போக்குவரத்து காலத்தின் கட்டாயம். அதன் தொடர்பாக கடல்சார் கல்வி கற்ற மாணவ-மாணவிகளுக்கு வேலைவாய்ப்புக்கு வழி வகை செய்யும். மேலை நாடுகளை போல நமது நாட்டிலும் கடல் வழி போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில் மாநில முதல்-அமைச்சர் உடனடி பரிசீலனை செய்ய வேண்டும்.
கனவாகவே உள்ளது
செஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த கட்டுமான பொருட்கள் விற்பனையாளர் வினோத்:- சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு கடல் வழியாக கப்பல் இயக்கும் திட்டம் வரவேற்கத்தக்கது. கடல் வழி மார்க்கத்தில் தமிழகத்தில் மிகக் குறைந்த சதவீத மக்களே பயணம் செய்துள்ளனர். கப்பல் பயணம் என்பது கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கு கனவாகவே உள்ளது. மேலும் கட்டுமான தொழிலுக்கு தேவையான பொருட்களை கப்பல் மார்க்கத்தில் கொண்டு செல்வது எளிதாக இருக்கும். நீளமான இரும்பு கம்பிகளை லாரிகளில் கொண்டு செல்லும்போது மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. மேலும் கப்பல் மூலம் கொண்டு செல்வதால் செலவு குறைவாக இருக்கும். பஸ் போக்குவரத்து, ரெயில் போக்குவரத்து, விமான போக்குவரத்து ஆகியவற்றில் எளிதாக பயணிக்கும் பொதுமக்களுக்கு கடல் வழி மார்க்கத்தில் பயணிப்பதை எளிதாக்கினால் சுற்றுலாப்பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள்.
நஷ்டத்தில் தான் இயங்கும்...
காரைக்குறிச்சி கிராமத்தில் வசிக்கும் புவியியல் ஆசிரியர் கோபிநாத்:- தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளான சென்னை முதல் கன்னியாகுமரி வரையில் உள்ள பகுதிகளில் கப்பல் போக்குவரத்து குறித்து பல்வேறு காலங்களில் தொடர் ஆய்வுகள் நடைபெற்றன. ஆனால் கிழக்கு கடற்கரை பகுதியில் கப்பல் செலுத்தும் அளவிற்கு ஆழமான அமைப்பு இல்லை. கிழக்கு கடற்கரை பகுதியில் கடலோடு கலக்கும் ஆறுகளுக்கு படிவுகள் ஏற்படுத்தும் திறன் அதிகமாக உள்ளது. மேற்கு கடற்கரை பகுதியில் உள்ள ஆறுகள் போல் வேகமாக சென்று அரிப்பை ஏற்படுத்தி கடலின் ஆழத்தை அதிகப்படுத்தும் தன்மை கிழக்கு கடற்கரை பகுதியில் கடலோடு கலக்கும் ஆறுகளுக்கு இல்லை. எனவே சென்னை முதல் கன்னியாகுமரி வரை கடலோர கப்பல் போக்குவரத்திற்கு உரிய பாதையில் ஆழப்படுத்தி கப்பல் போக்குவரத்து ஏற்படுத்தி அதனால் ஏற்படுத்தும் லாபத்தை விட மீண்டும் மீண்டும் படிவுகளை ஏற்படுத்தும் ஆறுகளால் அந்த படிவுகளை நீக்கி மீண்டும் ஆழப் படுத்துவதற்கு ஆகும் செலவு அதிகம் என்பதால் இத்திட்டம் நஷ்டத்தில் தான் இயங்கும் சூழ்நிலை ஏற்படும். ஒருவேளை கடலோரத்தில் கப்பல் போக்குவரத்திற்கான வாய்ப்பை நிச்சயம் நிறுவியே ஆக வேண்டும் என்றால் சூயஸ் கால்வாய் போல மண்ணைத் தோண்ட தோண்ட அந்த பகுதியில் சுவர் எழுப்பிக் கொண்டே செல்லும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இது பெரும் பொருட்செலவில் நடைபெறும் திட்டமாகவே அமையும். எனவே இதுவும் நடைமுறைக்கு சாத்தியமா என்பது சந்தேகமே.
இவ்வாறு அவர்கள் கூறினர்.