கடல்வழி பயணம் காலத்தின் கட்டாயம்
கடல் மார்க்கமாக நீர் வழிப்போக்குவரத்து அமைப்பது நல்லது. நீர் வழிப்போக்குவரத்து மெதுவாக சென்றாலும், குறைந்த பொருள் செலவில் அதிக பொருட்களை கொண்டு செல்ல முடியும். இதுகுறித்து தேனி மாவட்டத்தை சேர்ந்த மக்கள் தெரிவித்த கருத்துகள் விவரம் வருமாறு:-
கப்பல்கள், படகுகள் மூலமாக ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கடல் வழியாக செல்லும் போக்குவரத்து உள்நாட்டு அளவில் அதிக பயன்பாடுகள் இல்லாமல் இருந்தாலும், சர்வதேச அளவில் மிக முக்கியப் போக்குவரத்தாக இருக்கிறது.
தமிழ்நாடு
தமிழ்நாட்டில் சென்னை துறைமுகம், எண்ணூர் காமராஜர் துறைமுகம், துத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் போன்றவை முக்கியத்துவம் வாய்ந்தவை ஆகும்.
சென்னை துறைமுகம் வழியாக கார், தோல் பொருட்கள், ஆயத்த ஆடைகள், ரசாயனங்கள், ஆட்டோ மொபைல் உதிரி பாகங்கள் மற்றும் பொறியியல் எந்திரங்களின் உதிரி பாகங்கள் ஆகியவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
அதேபோல், உணவுப் பொருட்கள், உரங்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் ஆகியவை முக்கிய இறக்குமதி செய்யப்படுகின்றன.
எண்ணூர் காமராஜர் துறைமுகத்தின் மூலம் நிலக்கரி, பெட்ரோலியப் பொருட்கள், வேதியியல் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. வ.உ.சி. துறைமுகம் மூலம் உணவு, மாட்டுத் தீவனம், கனிமங்கள், சமையல் எண்ணெய், சிமெண்ட் போன்றவை கையாளப்படுகின்றன.
பயணிகள் கப்பல்
துறைமுகங்கள் மூலம் சரக்கு போக்குவரத்து நடந்து வந்தாலும், பயணிகள் போக்குவரத்து இதுவரை தமிழ்நாட்டில் சாத்தியப்படாமலே இருந்து வருகிறது.
எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்த போது, சென்னை, புதுச்சேரி, காரைக்கால் வழியாக கன்னியாகுமரிக்கு மிதவைப் படகு (ஹோவர்கிராப்ட்) போக்குவரத்தை தொடங்கத்திட்டம் தீட்டினார். இதுதொடர்பாக ஜப்பானில் உள்ள நிறுவனத்திடமும் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டது. அதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் அந்த திட்டம் ஏனோ செயல் வடிவம் பெறவில்லை.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள் நலன் கருதி தற்போது பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வரும் நிலையில், சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து திட்டத்தையும் நிறைவேற்றித் தரவேண்டும் என்பது தமிழ்நாட்டு மக்களின் குரலாக இருக்கிறது.
சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும்
இதுகுறித்து சென்னை பண்பு மற்றும் கலாசார பயிற்சி முனைய அறக்கட்டளை தலைவர் ராஜலெட்சுமி கூறியதாவது:-
தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, ஓடிசா, மராட்டியம், குஜராத் போன்ற மாநிலங்கள் கடலோரத்தில் இருப்பதுடன், நதிகளும் இருப்பதால் அங்கு நீர் வழிப்போக்குவரத்து தொடங்குவது எளிது. அவை காலத்தின் கட்டாயமாகவும் இருக்கிறது. நிலப்பரப்பில் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதை முற்றிலும் தடுப்பதற்காக நீர் வழி போக்குவரத்தை தொடங்குவது சிறந்ததாகும்.
சாலைப்போக்குவரத்துக்கு தேவையான சாலைகள் அமைக்க விவசாய நிலங்கள், நீர் வழித்தடங்கள் சேதப்படுத்த வேண்டிய நிலை ஏற்படும். இதனால் குடிநீரும் பாதிக்கப்படலாம். எனவே கடல் மார்க்கமாக நீர் வழிப்போக்குவரத்து அமைப்பது நல்லது. நீர் வழிப்போக்குவரத்து மெதுவாக சென்றாலும், குறைந்த பொருள் செலவில் அதிக பொருட்களை கொண்டு செல்ல முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து தேனி மாவட்டத்தை சேர்ந்த மக்கள் தெரிவித்த கருத்துகள் விவரம் வருமாறு:-
கடல்வழி பயணம்
அனீஸ்பாத்திமா (கல்லூரி பேராசிரியை, உத்தமபாளையம்) :- கடந்த ஆண்டு, சர்வதேச கப்பல் மாநாடு நடந்தது. அந்த மாநாட்டை துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் மற்றும் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு இணைந்து நடத்தியது. இந்திய கப்பல் சந்தை 10 மடங்கு வளர்ச்சியடையும் திறனைக் கொண்டுள்ளது, இது தேவை அதிகரிப்பு மற்றும் செலவழிப்பு வருமானம் ஆகியவற்றால் இயக்கப்படுகிறது. இந்தியா ஒரு அற்புதமான பயண இடமாகும், அதன் 7,500 கி.மீ. நீளமுள்ள கடற்கரை மற்றும் பரந்த நதி அமைப்புகளில் இந்தியாவின் பல இடங்கள் இன்னும் உலகிற்கு வெளிப்படுத்தப்படவில்லை. இந்திய அரசாங்கம் ஆற்றலை உணர்ந்து, கடல் மற்றும் நதி கப்பல்கள் இரண்டுக்கும் அதிநவீன உள்கட்டமைப்புகளுடன் இந்தியாவை உலகளாவிய கப்பல் மையமாக நிலைநிறுத்துவதில் உறுதியாக உள்ளது. இந்தியாவில், உலகளாவிய வீரர்கள் கப்பல் சுற்றுலாவை ஊக்குவிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர், மேலும் சரியான உள்கட்டமைப்புடன், நவீன தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வதன் மூலம் இது நிகழலாம். தமிழக அரசும், சென்னை, கன்னியாகுமரி, ராமேஸ்வரம், தூத்துக்குடி இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்தை இயக்கினால் சுற்றுலா ரீதியில் அபரிமிதமான வளர்ச்சியை எட்ட முடியும்.
ஐஸ்வர்யா (நகைக்கடை ஊழியர், அல்லிநகரம்) :- வாகன பெருக்கம் காரணமாக சாலை போக்குவரத்து நெரிசல் மிகுந்ததாக மாறியுள்ளது. சென்னை போன்ற நகரங்களுக்கு செல்வதாக இருந்தால் காஞ்சீ புரத்தில் இருந்தே நெரிசல் தொடங்கி விடுகிறது. வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலைமை உள்ளது. அதுவே கடல் வழி பயணமாக இருந்தால் நெரிசல் இன்றி செல்ல முடியும். மக்களுக்கு கடல் பயணம் என்பது புதிய அனுபவமாக இருக்கும். எனவே, தமிழக அரசு கடல்வழி பயணத்துக்கு பயணிகள் கப்பல் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடல்வழி பயணம் காலத்தின் கட்டாயமாகி வருகிறது. சாலை போக்குவரத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பை குறைக்க கடல்வழி பயணத்தை தொடங்கலாம்.
சுற்றுலா வருவாய்
ஈஸ்வரமூர்த்தி (பாத்திரக்கடை உரிமையாளர், கம்பம்) :- கப்பலில் பயணம் செய்ய வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கும். ஆனால், பலருக்கும் அது கனவாகவே இருந்து வருகிறது. தமிழகத்தில் கடல்சார்ந்த நகரங்கள் பல உள்ளன. இந்த நகரங்களை இணைக்கும் வகையில் கடல்வழி பயணிகள் போக்குவரத்து தொடங்கினால் அரசுக்கு வருவாய் ஈட்டிக்கொடுக்கும் வகையில் அமையும். மக்களும் குடும்பங்களுடன் சுற்றுலா பயணமாகவும், வணிக ரீதியிலான பயணமாகவும் மேற்கொள்ள ஏதுவாக அமையும். சாலை போக்குவரத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாடும் குறையும். எனவே, கடல்வழி பயணிகள் போக்குவரத்து திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தலாம்.
ராகேஷ் (சுற்றுச்சூழல் ஆர்வலர், ஆண்டிப்பட்டி) :- பழங்காலத்தில் இருந்ேத கடல்வழி பயணம் இருந்து வந்துள்ளது. காலப்போக்கில் சாலை வழி பயணம், ரெயில் பயணம் காரணமாக கடல்வழி பயணிகள் போக்குவரத்து இல்லாமல் போய்விட்டது. மீண்டும் கடல்வழி பயணிகள் போக்குவரத்து தொடங்கினால், வாகனங்களால் ஏற்படும் காற்றுமாசுபாடு குறைய வாய்ப்பு உள்ளது. கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும், சுற்றுச்சூழலுக்கு மாசுபாடு ஏற்படாத வகையிலும் தற்போது கப்பல் போக்குவரத்தில் பாதுகாப்பான தொழில்நுட்பங்கள் வந்துள்ளன. விமானத்தில் 150 இருக்கைகள் இருக்கும். கடல்வழி கப்பல் பயணம் என்றால் ஆயிரம் இருக்கைகள் வரை அமைக்கலாம். தற்போது போதைப் பொருட்கள் கடல்வழியில் தான் அதிகம் கடத்தப்படுவதாக கூறப்படுகிறது. கடல்வழியில் பயணிகள் போக்குவரத்து கப்பலுக்கான வழித்தடங்களை உருவாக்கி போக்குவரத்து தொடங்கினால் அதுவும் ஒருவித கடல்வழி கண்காணிப்பு நடவடிக்கை தான். அதன்மூலம் கடல்வழி கடத்தலை தடுக்கவும் ஒரு வாய்ப்பாக அமையும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.