பன்றி பண்ணைக்கு 'சீல்' வைப்பு
பன்றி பண்ணைக்கு ‘சீல்' வைப்பு
குலசேகரம்:
திற்பரப்பு பேரூராட்சிக்கு உட்பட்ட பிணந்தோடு மாஞ்சக்கோணம் குளம் அருகே ஒரு பன்றி பண்ணை மக்கள் வசிக்கும் குடியிருப்புகளையொட்டி அமைந்திருந்ததால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வந்தது. மேலும், பண்ணை கழிவுகளை அங்குள்ள நீரோடை அருகில் குவிக்கப்பட்டிந்ததால் கழிவுகள் தண்ணீரில் கலந்து திற்பரப்பு அருவியின் கீழ்ப்பகுதியில் ஆற்றில் கலப்பதாக கூறப்படுகிறது. இதனால், அந்த பகுதியில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வரும் பன்றி பண்ணையை அகற்றக்கோாி பொதுமக்கள் கடந்த 2 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். அதைதொடர்ந்து பன்றி பண்ணையை அகற்றக்கோரி பலமுறை பேரூராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது. ஆனாலும் உரிமையாளர் பன்றி பண்ணையை அகற்றவில்லை. அதைதொடர்ந்து பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பண்ணையை உரிமையாளர் அகற்றாவிட்டால் பன்றிகள் பறிமுதல் செய்யப்படும் என நேற்றுமுன்தினம் நோட்டீசாக ஒட்டியது.
இந்தநிலையில் நேற்று காலையில் பேரூராட்சி தலைவர் பொன் ரவி, செயல் அலுவலர் எட்வின் ஜோஸ், துணைத்தலைவர் ஸ்டாலின்தாஸ், 3-வது வார்டு கவுன்சிலர் ராஜ்குமார் மற்றும் வருவாய் துறையினர், சுகாதாரத்துறையினர் மற்றும் குலசேகரம் போலீசார் பன்றிகளை பறிமுதல் செய்யும் வகையில் பன்றிப் பண்ணைக்கு சென்றனர். இவர்களுடன் திற்பரப்பு பேரூர் தி.மு.க. செயலாளர் ஜான் எபனேசர், நிர்வாகிகள் ரெவி, சுபாஷ், ஜெஸ்டின் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் செந்தில்குமார், சதீஸ், ராஜ்குமார் உள்பட ஏராளமான ஊர் மக்களும் அங்கு திரண்டனர். அப்போது அங்கு வந்த பண்ணை உரிமையாளர் பண்ணையை அகற்றுவதாக ஒப்புக்கொண்டார். மேலும், பண்ணையில் இருந்த சுமார் 500 பன்றிகளை 9 டெம்போக்களில் ஏற்றி வேறு இடங்களுக்கு அனுப்பி வைத்தார். அதைதொடர்ந்து பேரூராட்சி அதிகாரிகள் பன்றி பண்ணை கதவுகளை பூட்டி சீல் வைத்தனர்.