பெண்கள் மதரஸாவுக்கு 'சீல்' வைப்பு
ஏர்வாடியில் பெண்கள் மதரஸாவுக்கு ‘சீல்’ வைப்பு
ஏர்வாடி:
தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் மதரஸா பள்ளிகளில் கடந்த மாதம் 22-ந் தேதி தேசிய புலனாய்வு முகமையினர் சோதனை நடத்தினர்.
இதேபோல் நெல்லை மாவட்டம் ஏர்வாடி மீனாட்சிபுரத்தில், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சார்பில் செயல்படும் அறிவகம் பெண்கள் மதரஸா பள்ளியிலும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதிகாலை 6.30 மணியளவில் தொடங்கிய சோதனை 4 மணி நேரம் நீடித்தது. சோதனையின் முடிவில் ஒரு சில புத்தகங்களை மட்டும் அதிகாரிகள் எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. இதையொட்டி ஏர்வாடி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே கோவையில் கார் வெடித்த சம்பவம் தொடர்பாகவும் ஏர்வாடியில் த.மு.மு.க. பிரமுகரிடம் போலீசார் நேற்று விசாரணை நடத்தினர்.
இந்தநிலையில் நேற்று நாங்குநேரி தாசில்தார் இசக்கிபாண்டி தலைமையில் நாங்குநேரி உதவி போலீஸ் சூப்பிரண்டு ரஜத் சதுர்வேதி முன்னிலையில் வருவாய்த்துறை அதிகாரிகள், பெண்கள் மதரஸாவிற்கு `சீல்' வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.