விதிகளை மீறி கட்டிய 10 தங்கும் விடுதிகளுக்கு 'சீல்'


விதிகளை மீறி கட்டிய 10 தங்கும் விடுதிகளுக்கு சீல்
x
தினத்தந்தி 16 Oct 2022 12:15 AM IST (Updated: 16 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கல்லட்டி மலைப்பாதையில் விதிகளை மீறி கட்டிய 10 தங்கும் விடுதிகளுக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.

நீலகிரி

ஊட்டி,

கல்லட்டி மலைப்பாதையில் விதிகளை மீறி கட்டிய 10 தங்கும் விடுதிகளுக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.

கல்லட்டி மலைப்பாதை

நீலகிரி மாவட்டம் ஊட்டி அடுத்த கல்லட்டி மலைப்பாதை 36 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது. இந்த சாலையில் விபத்து ஏற்படுவதை தவிர்க்க பிறமாநில, பிற மாவட்ட வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தலைகுந்தா பகுதியில் போலீஸ் மற்றும் கல்லட்டி பகுதியில் வனத்துறை சார்பில்‌ சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது.

அங்கு 24 மணி‌ நேரம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதை‌ மீறி அத்திக்கல், நீத்தி பகுதிகளில் உள்ள குறுக்குப்பாதை வழியாக சுற்றுலா பயணிகளை காட்டேஜ் உரிமையாளர்கள் கல்லட்டிக்கு அழைத்து செல்வதாக குற்றச்சாட்டு எழுந்தது.

தங்கும் விடுதிகள்

இதேபோல் கடந்த ஜூலை மாதம் சுற்றுலா பயணிகளை அழைத்து சென்றதால் வாகனம் கவிழ்ந்து ஒருவர் உயிழந்தார். இதையடுத்து கலெக்டர் அம்ரித் உத்தரவின் பேரில், ஊட்டி ஆர்.டி.ஓ. துரைசாமி தலைமையில், தாசில்தார் ராஜசேகரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நந்தகுமார், சிவக்குமார் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் உல்லத்தி ஊராட்சிக்கு உட்பட்ட தலைகுந்தா முதல் கல்லட்டி வரை செயல்படும் காட்டேஜ்களில் ஆய்வு நடத்தினர்.இதில் வீட்டுக்கு என அனுமதி பெற்று விட்டு தங்கும் விடுதிகளாக மாற்றியது உள்பட பல்வேறு விதிகளை மீறி இயங்கிய வருவதாக 177 கட்டிடங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

சீல் வைக்கும் பணி

இந்தநிலையில் விதிகளை மீறி இயங்கி வந்த தங்கும் விடுதிகளுக்கு சீல் வைக்க கலெக்டர் அம்ரித் உத்தரவிட்டார். இதன்படி தாசில்தார் ராஜசேகரன், ஊட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார் மற்றும் வருவாய் துறையினர், கல்லட்டி பகுதியில் விதிகளை மீறி கட்டப்பட்ட தங்கும் விடுதிகளுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

நேற்று ஒரே நாளில் 10 விடுதிகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆய்வு நடத்தி சீல் வைக்கும் பணி தொடரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story