திருமண மண்டபத்துக்கு சீல்
தஞ்சையில் வீடு கட்ட அனுமதி வாங்கிவிட்டு 5,525 சதுரஅடியில் கட்டப்பட்ட திருமண மண்டபத்துக்கு மாநகராட்சி அதிகாரிகள் `சீல்' வைத்தனர்.
தஞ்சை ராஜப்பா நகரை சேர்ந்தவர் எம்.ஏ.அப்துல் கதீம். இவருடைய மனைவி குர்ஷீத்பேகம். இவர் ராஜப்பா நகரில் 2,276 சதுர அடி பரப்பளவில் வீடு கட்டுவதற்காக மாநகராட்சியில் அங்கீகரிக்கப்பட்ட பொறியாளர் மூலம் அனுமதி பெற்றார். ஆனால், அனுமதி பெற்றதுக்கு மாறாக வீடு கட்டுவதற்கு பதிலாக வணிக நோக்கில் முன்பக்கம், பக்கவாட்டில் வழி எதுவும் ஒதுக்காமல், வாகன நிறுத்தும் இடம் இல்லாமலும் 5,525 சதுர அடியில் திருமண மண்டபம் கட்டி வந்துள்ளார். இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் சரவணகுமாருக்கு புகார் சென்றது. இது தொடர்பாக விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். அதன்படி அதிகாரிகள் நடத்திய விசாரணையில் வீடு கட்டுவதற்கு அனுமதி பெற்று திருமண மண்டபம் கட்டி வந்தது தெரியவந்தது.
`சீல்' வைப்பு
இதையடுத்து மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் ராஜசேகரன் தலைமையில் உதவி பொறியாளர்கள் கண்ணதாசன், ஆறுமுகம், மகேந்திரன் மற்றும் அதிகாரிகள் நேற்று ராஜப்பா நகருக்கு சென்று விதிகளை மீறி கட்டிடம் கட்டிய திருமண மண்டபத்திற்கு `சீல்' வைத்தனர்.
மேலும் நோட்டீசும் ஒட்டப்பட்டது. அதில், பூட்டி முத்திரையிடப்படும் கட்டிடத்தில் முத்திரை அகற்றப்படாமல் பாதுகாப்பு தர வேண்டியது சட்டப்படி கட்டிட உரிமையாளரின் முழு பொறுப்பாகும். எனவே தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள இதன்மூலம் தெரிவிக்கப்படுகிறது என கூறப்பட்டு இருந்தது.
பொறியாளர்கள் மீது நடவடிக்கை
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, தஞ்சை மாநகராட்சி பகுதிகளில் கட்டிடங்கள் கட்ட அனுமதி பெறும் போது, உரிய வாகன நிறுத்துமிடும், சாலையில் இருந்து உரிய இடவசதி ஆகியவற்றை கருத்தில் கொண்டு கட்டிடங்களை கட்ட வேண்டும். மேலும், இதுபோன்ற விதிமுறைகளை மீறும்போது மாநகராட்சியால் அங்கீகரிக்கப்பட்ட அனுமதி பெற்றுத் தந்த கட்டிட பொறியாளர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.