வரிபாக்கி செலுத்தாத திருமண மண்டபத்திற்கு சீல்
கிருஷ்ணகிரியில் வரிபாக்கி செலுத்தாத திருமண மண்டபத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் சொத்து வரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை திட்டம் உள்பட மொத்தம் ரூ.7.50 கோடி மேல் வரி பாக்கி உள்ளது. வரிபாக்கி உள்ள தொழில் நிறுவனங்கள், திருமண மண்டபங்கள் மற்றும் சினிமா தியேட்டர்களுக்கு நகராட்சி சார்பில் பலமுறை நோட்டீஸ் வழங்கியும் வரி பாக்கியை பலர் செலுத்தவில்லை. இந்நிலையில் கடந்த 1-ந் தேதி கிருஷ்ணகிரி டி.பி., லிங்க் ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் ஜப்தி நோட்டீசை ஒட்டினர். அதில் கடந்த 3 ஆண்டுகளாக மண்டபத்தின் தொழில்வரி, சொத்துவரி கட்டப்படவில்லை. நிலுவைத்தொகையான ரூ.3 லட்சத்து 21 ஆயிரத்து 608-ஐ வருகிற 6-ந் தேதிக்குள் கட்ட வேண்டும். தவறும் பட்சத்தில் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனிடையே நேற்று வரை நிலுவை வரி தொகை செலுத்தாததால் நகராட்சி வருவாய் ஆய்வாளர் லூக்காஸ், வருவாய் உதவியாளர் செல்வராஜ் ஆகியோர் அந்த திருமண மண்டபத்தை பூட்டி சீல் வைத்தனர்.