பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்துக்கு 'சீல்'
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்துக்கு ‘சீல்’
கும்பகோணத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்துக்கு கோட்டாட்சியர் 'சீல்' வைத்தார்.
5 ஆண்டுகள் தடை
பயங்கரவாத அமைப்புக்கு நிதி உதவி அளிப்பதாக கூறி 'பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா' அமைப்புக்கு சொந்தமான அலுவலகங்கள், நிர்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை(என்.ஐ.ஏ.) அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். தமிழகத்தில் இந்த அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து இந்த அமைப்புக்கும், இதன் துணை அமைப்புகளுக்கும் மத்திய அரசு 5 ஆண்டுகள் தடை விதித்தது.
'சீல்' வைப்பு
மத்திய அரசின் தடை உத்தரவையடுத்து இந்த அமைப்பின் அலுவலகங்கள், துணை அமைப்பின் அலுவலகங்களுக்கு சீல் வைக்கும் நடவடிக்கை தமிழக அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று கும்பகோணம் ஜான் செல்வராஜ் நகர் பகுதியில் உள்ள தஞ்சை மாவட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு அலுவலகத்தை கும்பகோணம் கோட்டாட்சியர் லதா பூட்டி 'சீல்' வைத்தார். அவருடன் தாசில்தார் தங்க. பிரபாகரன், கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன், கும்பகோணம் மேற்கு போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் உடன் இருந்தனர்.
அறிவிப்பு ஆணை நகல்
முன்னதாக இந்த அமைப்பு அலுவலகத்துக்கு 'சீல்' வைப்பதற்காக தஞ்சை மாவட்ட கலெக்டர் வழங்கிய அறிவிப்பு ஆணையின் நகலை வருவாய்த்துறையினர் அலுவலக கட்டிடத்தின் முன்பு ஒட்டினர். கும்பகோணத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு அலுவலகத்திற்கு 'சீல்' வைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.