பழனி வையாபுரிக்குளத்தில் கழிவுநீர் விடும் வணிக நிறுவனங்களுக்கு 'சீல்'; ஆர்.டி.ஓ. எச்சரிக்கை
பழனி வையாபுரிக்குளத்தில் கழிவுநீர் விடும் வணிக நிறுவனங்களுக்கு ‘சீல்’ வைக்கப்படும் என்று ஆர்.டி.ஓ. சிவக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பழனி வையாபுரிக்குளத்தை தூய்மைப்படுத்தும் பணி, ஆர்.டி.ஓ. சிவக்குமார் மேற்பார்வையில் நடைபெற்று வருகிறது. இதில் தன்னார்வலர்கள், விவசாயிகள் பங்களிப்புடன் கழிவுகள், குப்பைகள் அகற்றப்படுகிறது. மேலும் குளத்தின் நீர்ப்பிடிப்பு பகுதியில் தெப்பக்குளம் ஒன்று இருப்பது கண்டறியப்பட்டது. அதைத்தொடர்ந்து அதை தூர்வாரும் பணி நடந்து வருகிறது.
இந்தநிலையில் வையாபுரிக்குளத்தின் தூய்மை பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம், ஆர்.டி.ஓ அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு ஆர்.டி.ஓ. சிவக்குமார் தலைமை தாங்கினார். பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கோபி, நகராட்சி ஆணையர் கமலா, கோவில் துணை ஆணையர் பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஆர்.டி.ஓ. பேசும்போது, முதற்கட்டமாக வையாபுரிக்குளத்தில் கழிவுநீர் விடுவது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டது. அதில் பெரும்பாலான வணிக நிறுவனங்களில் 'செப்டிக் டேங்க்' இல்லாமல் நேரடியாக கழிவுநீரை குளத்தில் விடுவது கண்டுபிடிக்கப்பட்டது. அதையடுத்து சம்பந்தப்பட்ட ஓட்டல், மண்டபங்கள் உள்ளிட்ட 130 வணிக நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. எனவே வரும் நாட்களில் வையாபுரிகுளத்தில் நேரடியாக கழிவுநீர் விடும் நிறுவனங்களை 'சீல்' வைத்து நடவடிக்கை எடுக்க நகராட்சிக்கு அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் விவசாயிகள் பேசும்போது, வையாபுரிக்குளத்தில் கண்டறியப்பட்ட தெப்பக்குளம் பல ஆண்டுகளுக்கு முன்பு வரை பயன்பாட்டில் இருந்தது. எனவே இதை அனைத்து துறை அதிகாரிகளும் சீரமைத்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தினர். நகராட்சி அதிகாரிகள் பேசும்போது, குளத்தில் கழிவுநீர் கலப்பதை தடுக்க முதற்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். பாதாள சாக்கடை திட்டம் வரும்போது இதற்கு தீர்வு எட்டப்படும் என்றனர்.