போதை பொருட்கள் விற்ற டீக்கடைக்கு 'சீல்'
போதை பொருட்கள் விற்ற டீக்கடைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மற்றும் கடைக்காரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உத்தரவிட்டுள்ளார். அதைத்தொடர்ந்து குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி அறிவுரையின்படி கே.வி.குப்பம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரி மேற்பார்வையில், பரதராமி சப்- இன்ஸ்பெக்டர் அருண்காந்தி, கிராம நிர்வாக அலுவலர் சசிகுமார் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் பரதராமி பகுதியில் உள்ள கடைகளில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது பரதராமி மெயின் ரோட்டில் உள்ள ஒரு டீக்கடையில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் குட்கா பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்து, டீக் கடைக்காரர் கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தனர். மேலும் வருவாய்த் துறையினர் அந்த டீக்கடைக்கு சீல் வைத்தனர்.