அனுமதியின்றி வைக்கப்பட்ட உண்டியலுக்கு 'சீல்'


தினத்தந்தி 22 Feb 2023 12:15 AM IST (Updated: 22 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நாகை அனிச்சியகுடி முச்சந்தி காளியம்மன் கோவிலில் அனுமதியின்றி வைக்கப்பட்ட உண்டியலுக்கு அறநிலையத்துறை அதிகாரிகள் சீல் வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்

நாகை அனிச்சியகுடி முச்சந்தி காளியம்மன் கோவிலில் அனுமதியின்றி வைக்கப்பட்ட உண்டியலுக்கு அறநிலையத்துறை அதிகாரிகள் சீல் வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உண்டியலுக்கு 'சீல்' வைப்பு

நாகை பப்ளிக் ஆபீஸ் சாலையில் பழமை வாய்ந்த அனிச்சியகுடி முச்சந்தி காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடிப்பூரம் மற்றும் புரட்டாசி பொங்கல் விழா வெகுவிமர்சையாக நடத்தப்படுவது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று காலை இந்த கோவிலுக்கு நாகை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராணி தலைமையில் அதிகாரிகள் வந்தனர். இதை தொடர்ந்து கோவிலுக்கு வெளியே அனுமதியின்றி வைக்கப்பட்டு இருந்த உண்டியலுக்கு 'சீல்' வைத்தனர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த அந்தபகுதி பொதுமக்கள் நாகை -நாகூர் சாலையில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், தாசில்தார் ராஜசேகரன், நகர மன்ற தலைவர் மாரிமுத்து ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது கோவில் உண்டியலுக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றினால் மட்டுமே மறியலை கைவிடுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இதையடுத்து நகர மன்ற தலைவர் மாரிமுத்து, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராணியிடன் பேச்சுவார்த்தை நடத்தி கோவில் உண்டியலில் வைக்கப்பட்ட சீலை அகற்ற கோரிக்கை விடுத்தார்.

அதிக அளவில் காணிக்கை பெறுவதாக புகார்

இதையடுத்து கோவிலுக்கு வந்த உதவி ஆணையர் ராணி உண்டியலில் வைக்கப்பட்ட சீலை அகற்றி சாவிக்கு மட்டும் சீல் வைத்தார்.

இந்த கோவிலில் அதிக அளவில் நகை, பணம் காணிக்கையாக பெறப்படுவதாக சென்னையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு புகார் வந்ததன் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், இந்துசமய அறநிலையத்துறை மூலம் இந்த கோவிலுக்கு ஒரு கால பூஜைக்கான நிதி வழங்கப்பட்டு வருவதாகவும் உதவி ஆணையர் ராணி கூறினார்.

போக்குவரத்து பாதிப்பு

இதையடுத்து கோவில் திறக்கப்பட்டு அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து விட்டுவல67வசகனஉஒண அங்கிருந்து கலைந்தது சென்றனர். இந்த திடீர் சாலை மறியல் போராட்டம் காரணமாக சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story